வியாழன், 23 மார்ச், 2017

அசோகமித்திரன் -1

எனது படைப்பில் பெண்கள்! 
அசோகமித்திரன்
 (அவள் விகடன்: 21.01.2000)

[ நன்றி: தடம் ] 


மார்ச் 23, 2017. இன்று அசோகமித்திரன் காலமானார். அவருக்கு ஓர் அஞ்சலியாய் அவருடைய நேர்காணல் ஒன்றை இங்கிடுகிறேன்.

====
 ஆணென்ன பெண்ணென்ன...

பெண்ணின் ஆழ்மன உணர்வுகளாகட்டும், அன்றாட நடைமுறையில் அவளுடைய சின்னச் சின்ன இயல்பான சிந்தனைகளாகட்டும் - போகிறபோக்கில் இயல்பாகச் சொல்கிற தொனி அசோகமித்திரனுடையது. பெண்ணியல் நோக்கில் எழுதுகின்ற பெண் எழுத்தாளர்களுக்குக்கூட, எப்போதாவது எழுத்தில் பெண்ணின் உணர்வுகளைச் சொல்வதில் ஒரு நாளும் இந்தத் தர்மசங்கடம் நிகழ்ந்ததில்லை!

இப்படி ஒரு பெண்முகம் உங்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று?

எந்தக் கதையும் யோசிச்சு, இந்த முடிவுக்காக - இந்தக் கருத்துக்காகன்னு நான் எழுதறது கிடையாது. நம்மைச் சுற்றி நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். நிறைய சம்பவங்கள் நடந்துகொண்டு இருக்கு. பார்க்கப் போனா எழுத்தாளனுக்கு எழுத ஏராளமான சூழ்நிலைகள் கிடைக்குது. நாம அதை எடுத்து விரிவுபடுத்திக் கையாளறோம். எனக்கு பெண்களைப் பற்றி இந்தப் பார்வை, ஆணைப் பற்றி இந்தப் பார்வைன்னு தனியாக ஒண்ணும் கிடையாது. கற்பனை சக்திக்கு ஆண் - பெண் பேதம் உண்டா என்ன? நாம, நம்ம கற்பனையை எதுல செலுத்தறோம்கிறது இருக்கு. நம்ம வீட்டுக்கு அன்றாடம் வந்துட்டுப் போறவங்க - கறிகாய்காரி, வேலை செய்யவர்றவங்க... பார்க்கப் போனா இவங்ககிட்டதான் வாழ்க்கைக்கான நிறையப் பரிமாணங்கள் இருக்கு.


அவங்களோட வாழ்க்கை, உங்களுக்கு எப்படிப் பிடிபடுது?

நாம பார்க்கிற எல்லோர்கிட்டயும் வாழ்க்கை இருக்கு. நாம கண்ணைத் திறந்து வெச்சுட்டுப் பார்த்தா தானா வெளிச்சம் ஆகும். நான் எல்லாத்தையும் தெரிஞ்சுட்டு எழுதறது கிடையாது. எழுதற போக்கிலதான் தெளிவு வருது. நிறையப் பேருக்குச் சின்ன வயசிலேயே வாழ்க்கை மரத்துப் போயிடுது. புதுசாகச் சிந்திக்கிறது இல்லை. எல்லா விஷயத்தைப் பற்றியும், பழகின பாதையிலேயே பார்க்கப் பழகிடறோம். எனக்கு எந்த நேரமும், மனுஷங்க எல்லாம் புதுசாகவே படறாங்க. யாரையும், இவங்க இப்படித்தான்னு நான் ஃபிக்ஸ் பண்றதில்லை. சின்னவங்க - பெரியவங்க, வேலை தேடறவங்க - தேடாதவங்க, ஒல்லியானவங்க - குண்டானவங்க இப்படி எல்லோருக்கும் ஏதோ விஷயம் இருக்கு. தடிமனா இருக்கிறதை ஒரு பெண் எப்படி உணர்றாங்கிறதைப் பத்தி நான் ஒரு தடவை கதை எழுதி இருக்கேன். நம்மைச் சுற்றி நிறைய விஷயங்கள் இருந்துகொண்டு இருக்கு.

பொதுவாகப் பெண்ணினுடைய உணர்வுகளைச் சொல்ற எழுத்தில், சமயத்தில் ஆண் பாத்திரங்கள் மேல் கறுப்புச் சாயம் பூசறது நடக்கும். உங்க எழுத்தில் அது நிகழாதது எப்படி?

எல்லா விஷயத்திலும் ஒரு பாலன்ஸ் வேணும். ஒரு மனுஷன், பெண் வர்க்கத்துக்கிட்ட நியாயமில்லாம நடந்துகிட்டா அவன் - அவன் வர்க்கத்துக்கிட்டயும் நியாயமில்லாமதான் இருப்பான். இது எதிர்மறையாகவும் பொருத்தும். அடிப்படையில் எந்த மனிதப் பிறவியும் பாவி இல்லை.

இந்த நிதானம் எப்படி வருது?

வாழ்க்கையில் நாம் தொடர்ந்து வளர்றோம்னு சொல்றாங்க. தேடல்னு சொல்றாங்க. நான் அப்படி நினைக்கலை. எல்லோர்க்கும் வாழ்க்கை பத்தின புதிர் எதோ ஒரு காலகட்டத்துல புரிஞ்சுடுதுன்னு நினைக்கறேன். புரிஞ்சதுதான் நம்மளைச் செலுத்தறது. ஆண் வேறு, பெண் வேறு இல்லை. அடிப்படையில நாம எல்லோரும் மனுஷங்கதான்கிறது பதிஞ்சுபோச்சு. பேதம் பார்க்க முடியலை. பெண்ணையும் தப்பாக்க முடியறதில்லை. ரெண்டு பேருக்கும் கஷ்டங்கள் இருக்கு; தாபங்கள் இருக்கு.

கிட்டத்தட்ட 40 வருஷத்துக்கு மேலாக எழுதறீங்க. திருமணமாகாமல், ஆகி, தந்தையாகி, தாத்தாவாகி என வெவ்வேறு காலகட்டத்துல எழுதி இருக்கீங்க. யோசித்துப் பார்த்தா, பழைய கதைகளை, குறிப்பாக, பெண் தொடர்பான கதைகளை இப்ப எழுதினா, வேறு சிந்தனையில் எழுதி இருப்பீங்கன்னு நினைக்கிறீங்களா?


பார்க்கப் போனா, 'தண்ணீர் நாவலை எழுதறபோது எனக்கு வயசு 38. அந்த மாதிரி கதை எழுதறதுக்கு அது சின்ன வயசுன்னுகூடச் சொல்லலாம். எப்பவும் கதையோட மையம் மாறாதுன்னு நினைக்கறேன். கொஞ்சம் எக்ஸ்ட்ராவா விளக்கங்கள் வேணும்னா கொடுக்கலாம். சின்னதா தட்டி நாகாசு வேலை பண்ணலாம்.

பெண்களைப் புரிஞ்சுண்டு எழுதுறது பத்தி, பெண் வாசகிகள் சொல்லி இருக்காங்களா?

இல்லை... அப்படி யாரும் சொல்லாததுதான் சரின்னு நினைக்கிறேன். என் எழுத்து வலிஞ்சு இல்லை. எதைப் பத்தியும் யாரும் என்கிட்ட வலிஞ்சு பேசாததுதான் சரியா படறது. நான் எப்பவுமே சுயமுக்கியத்துக்காக முயற்சி செய்தது கிடையாது. அதனால எனக்கு ஒரு கஷ்டமும் கிடையாது. என் எழுத்து யாரையும் கெடுதல் செய்யாம இருக்கணும். எனக்குக் கிடைக்கிற அனுபவத்தை நேர்மையாக நடைமுறை இயல்போடு சித்திரிக்கிறேன். இப்படி செய்யவே, எழுதவே இன்னும் ஏராளமாக இருக்கு!

-மா
[ நன்றி : அவள் விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:
அசோகமித்திரன்

1 கருத்து:

கோமதி அரசு சொன்னது…

அருமையான பகிர்வு.