புதன், 4 அக்டோபர், 2017

862. வாலி -2

நினைவு நாடாக்கள் -2 

வாலி 

பூஜ்யஸ்ரீ வாசன் அவர்கள் பூதலூர் சாஸ்திரிகளிடமிருந்து, எழுத்துக்கு நூறு ரூபாய்
எனும் கணக்கில் -
எட்டெழுத்துக்கு எண்ணூறு ரூபாய் என்று வாங்கிய ஆனந்த விகடனில் 
இதுகாறும் நான், கதை; கவிதை; காவியம் எழுதியிருக்கிறேன். கட்டுரை இப்போதுதான்!
'இருக்க வேண்டும் உங்கள் எழுத்து, வாராவாரம்; இருக்கக் கூடாது உங்கள் எழுத்து வாரா வாரம்! எதைப்பற்றியும் எழுதலாம்; ABOUT ANY-THING UNDER THE SKY! என்றார்கள்; ஏற்றேன்!
'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே!' என்கிறது தொல்காப்பியம்.
ஒரு சொல் ஒரு பொருளைக் குறிக்கலாம்; ஒன்றுக்கு மேலும் குறிக்கலாம்; அது
வியப்பல்ல!
ஆனால், ஒரு சொல்லுள் ஓரைந்து சொற்கள் உள!
அந்தச் சொல்தான் 'வாழ்க்கை'!
'வாழ நினைத்தால் வாழலாம்' எனும் கண்ணதாசன் பாட்டுக்கு உரிய வியாக்கியானம் -
'வாழ்க்கை' எனும் ஒரு சொல்லுள் ஒளிந்துகிடக்கிறது. அதனை ஓர்வார், வெற்றித் தேரில் ஊர்வார்!
 வறுமையிலேயே வாடிக்கொண்டு, வாழ்க்கை தமக்கு வாய்க்கவில்லையே என - மூக்கைச் சிந்துவோருக்கு எல்லாம் ஒன்று சொல்லுவேன்.
'ஊழிற் பெருவலி யாவுள' என்பது, ஒருபுறம் இருக்கட்டும். 'வாழ்க்கை' எனும் சொல்லை - அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துப் பாருங்கள்...
அந்த ஊழ், ஆகும் கூழ்!
நொந்தாரையும்; நொந்து நொந்து வெந்தாரையும் பார்த்து...
வாழ்க்கையின் முதல் எழுத்து அழைக்கின்றது 'வா' என்று;
முதல் எழுத்தும் இரண்டாம் எழுத்தும் சேர்ந்து 'வாழ்' என்கிறது.
எதை நம்பி என்னும் கேள்விக்கு, நான்காம் எழுத்து நவில்கின்றது விடை 'கை' என்று;
அதுமட்டும் அல்ல, கைகொண்டு உழைத்தாலும், காக்க வேண்டியது ஒன்று உண்டு என்று சொல்கிறது - முதல் எழுத்தும், மூன்றாம் எழுத்தும், நான்காம் எழுத்தும் சேர்ந்து 'வாக்கை' என்று;
மேற்சொன்ன கருத்தை உள்வாங்கி உழைத்தால் - நீ பெறுவது என்னவென்று முதல் எழுத்தும் நான்காம் எழுத்தும் சேர்ந்து சொல்கிறது 'வாகை' என்று!
'வா';
'வாழ்';
'கை';
'வாக்கை';
'வாகை'; - எனும் அய்ந்து சொற்களைத் தன்னுள் சூல்கொண்டு நிற்கும் ஒரே சொல் 'வாழ்க்கை'!
ஆக, அடியேன் அறிவிப்பது ஆதெனில்...
வாழ்க்கை என்பது மழை நாளில் உன் வீட்டு வாசலில் முளைக்கும் நாய்க்குடை அல்ல; அது நிழற்குடை!
தாரித்திரிய வெயில் தழல் பரப்பி, உனைத் தகிக்கையில் - உனக்கு நிழல் பரப்பி உதவவல்ல அந்த நிழற்குடையை, நீதான் முயன்று முன்நின்று வனைந்தெடுக்க வேண்டும்!
நாய்க்குடை - வான் வடிக்கும் நீரில் விளைவது; நிழற்குடை, உனது ஊன் வடிக்கும் நீரில் உண்டாவது!
வேர்வையில் விளைவது வாழ்க்கை; வேர்வையை வெல்லுமோ ஊழ்க்கை?'
[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள் :

கருத்துகள் இல்லை: