திங்கள், 3 ஜூலை, 2017

758. டாக்டர் ஜெயபாரதி - 1

ஒட்டக்கூத்தரும், புகழேந்தியும்
ஜெயபாரதி 


ஜூலை 2. மலேசியத் தமிழறிஞர் , நண்பர் ஜெயபாரதியின் பிறந்த தினம்.
====

     நளவெண்பாவைப் பாடி முடித்தவுடன் புகழேந்தி விடுதலை அடைந்தார்.
     குலோத்துங்கர் அவரையும் ஒட்டக்கூத்தரையும் அழைத்தார். இருவரையும் ஒன்றாக வைத்துக்கொண்டு, "நீங்கள் இருவருமே இப்படி விரோத மனப்பான்மையுடன் இருப்பது நல்லதாகத் தெரியவில்லை. உங்களுக்கு நிகராக யாருமே இல்லை. ஆகவே இருவருமே ஒத்த மனப்பான்மையுடன் இருந்தால் உலகத்துக்கே நல்லது", என்றார்.

     இருவருக்கும் அது சரியாகப் பட்டது.
     "ராசா கைய வச்சா....அது பாசா ஆகிரும்ங்க" என்பது அந்தக் காலத்திலேயே அசைக்கமுடியாத உண்மையாக இருந்திருக்கிறது.

     திருநெய்த்தானம் என்னும் திருத்தலம் ஒன்று இருக்கிறது. அது தேவாரப்
பாடல் பெற்ற ஸ்தலம். நெய்யாடியப்பர் என்னும் பெயரில் பாலாம்பிகையுடன் சிவபெருமான் இருக்கும் திருக்கோயில்.

     குலோத்துங்கர் அந்தத் திருக்கோயிலுக்கு ஒட்டக்கூத்தரையும்
புகழேந்தியையும் அழைத்துச் சென்றார்.
     "பறையும்பழி பாவம்படு துயரம்பலதீரும்" என்ற சிறப்பை வைத்துத்
திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
     பழி பாவங்கள் யார் செய்திருப்பினும் தீரவேண்டும் என்று குலோத்துங்கர் நினைத்திருக்கலாம்.

     இருவரையும் திருநெய்த்தான ஈசரைச் சிறப்பித்து ஆளுக்கொரு பாடலைப் பாடுமாறு குலோத்துங்க சோழர் கேட்டுக்கொண்டார்.
     "பேயாயின பாடப் பெருநடமாடிய பெருமான்
     வேயாகிய தோளிக்கொரு பாகம் மிக வுடையான்.... சுடுநீறணி யண்ணல் சுடர்சூலம் அனலேந்தி நடுநள்ளிருள் நடமாடிய நம்பன் உறையிடமாம்...."
     இந்தக் கருத்தை உள்வைத்து முதலில் ஒட்டக்கூத்தர் பாடினார்.....

விக்கா வுக்கா வித்தா விப்போய் விட்டா னட்டார் சுட்டூர் புக்கார்
இக்கா யத்தா சைப்பா டுற்றே டிப்போய் வைப்பீர் நிற்பீர்
அக்கா டப்பேய் தொக்கா டச்சூ ழப்பா டத்தீ வெப்பா டப்பூண்
நெக்கா டக்கா னத்தா டப்பேர் நெய்த்தா னத்தா னைச்சே வித்தே

     அடுத்து புகழேந்தியார் பாடினார்......

தற்கோ லிப்பூ சற்பா சத்தே தப்பா மற்சா கைக்கே நிற்பீர்
முற்கோ லிக்கோ லிப்பூ சித்தே முட்டா மற்சே வித்தே நிற்பீர்
வட்டா நெட்டோ டைப்பா ரைச்சேல் மைப்பூ கத்தே றித்தா விப்போய்
நெற்றா லுற்றா லைப்பா கிற்சேர் நெய்த்தா னத்தா னைத்தியா னித்தே

     அடிப்படையான கருத்து இருவர் பாடியதிலும் ஒன்றுதான்.
     "அது இது எது எல்லாத்தையும் விட்டுட்டு நெய்த்தான ஈசனைச்
சேவியுங்கள்; தியானியுங்கள்".
     இந்தப் பாடல்களின் பொருள்...

     ஒட்டக்கூத்தரும் புகழேந்தியாரும் பாடிய இந்தப் பாடல்கள்
பல வித்வான்கள் பாடிய தனிப்பாடல் திரட்டு' என்னும் நூலின் முதற்பாகத்தில் காணப்படுகின்றன.

     இதன் மூலநூலில் காணப்படும் பாடல்கள் தில்லையம்பூர் சந்திர சேகரக்
கவிராஜ பண்டிதரால் சேகரிக்கப்பட்டவை. இவற்றைக் காஞ்சிபுரத்துக் கச்சபாலைய ஐயர் என்பவர் பரிசோதித்துச் சரிபார்த்து முதல் பதிப்பு வெளியிடப் பட்டது. அந்த பதிப்பை தமிழ் அறிஞர் திருமயிலை சண்முகம் பிள்ளை மேலும் சரிபார்த்து, புதிதாக இன்னும் சில பாடல்கள் அதில் சேர்க்கப்பட்டு, இராமநாதபுர சமஸ்தானத்து அரசர் சேதுபதியின் அண்ணனும் சமஸ்தான நிர்வாகியுமான பொன்னுச்சாமித் தேவர் அவர்களின் ஆணைப்படி மீண்டும் புதிதாக 1940-ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது.

     அதே சமயத்தில் தனிப்பாடல் திரட்டு தமிழ்ப் பேராசிரியர், தாகூர் சட்ட
விரிவுரையாளர் கா.சுப்பிரமணிய பிள்ளையால் 1939-ஆம் ஆண்டில் உரை எழுதப்பெற்று இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டு அதன் பதிப்பு 1957-ஆம் ஆண்டில் வெளியாகியது.

     இப்போது காசுப் பிள்ளை என்று அன்பாக அழைக்கப்பட்ட சட்ட நிபுணரும் சட்டநூல் இயற்றியவருமான கா சுப்பிரமணிய பிள்ளை என்னும் தமிழ்ப் பேரறிஞர் எழுதிய உரையைத்தான் இங்கே முன்வைக்கிறேன்........

விக்காவுக்காவித்தாவிப்போய்விட்டா னட்டார் சுட்டூர் புக்கார்
இக்காயத்தாசை பாடுற்றேடிப்போய் வைப்பீர் நிற்பீர்
அக்காடப் பேய் தொக்காடச் சூழப்பாடத் தீவெப்பாடப் பூண்
நெக்காடக் கானத்தாடப்பேர் நெய்த்தானத்தானைச் சேவித்தே

விக்கா-விக்கி
உக்கு - தளர்ந்து
ஆவித் தாவிப் போய் விட்டால் -உயிர் உடலைக் கடந்து போய்விட்டால்
நட்டார் - உறவினர்
சுட்டு ஊர் புக்கார் - பிணத்தைத் தகனம் செய்துவிட்டு ஊர்க்குள் போய்விடுவர்
இக்காயத்து ஆசைப் பாடுற்றே - இந்த இயல்புடைய உடம்பில் பற்று வைத்து
இல் தேடிப் போய் வைப்பீர் - செல்வத்தைச் சம்பாதித்து வீட்டில் கொண்டு
போய் வைப்பவர்களே
அக்காட - தாம் அணிந்திருக்கும் எலும்பு மாலை அசையவும்
பேய் தொக்காட - பேய்கள் ஒருங்குகூடிக் கூத்தாடவும்
சூழ் அப்பு ஆட - சடையில் சூழ்ந்திருக்கும் கங்கையானது அசையவும்
தீ வெற்பு ஆட - திருக்கையில் வைத்திருக்கும் வெப்பமான நெருப்பு
அசையவும்
பூண் நெக்கு ஆட - காதில் அணிந்திருக்கும் அணிகள் நெகிழ்ந்து
அசையவும்
அக்கானத்து ஆடு - அந்தச் சுடுகாட்டினிடத்தில் நடனம் செய்கின்ற
அப்பேர் நெய்த்தானத்தானைச் சேவித்தே - அந்தப் பெருமை பொருந்திய
நெய்த்தானம் என்னும் திருப்பதியில் வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபட்டு
நிற்பீர்- நிலையான கதியைப் பெற்றுய்வீராக

புகழேந்தியார் பாடிய பாடல் -

தற்கோலிப்பூசற்பாசத்தே தப்பாமற்சாகைக்கே நிற்பீர்
முற்கோலிக்கோலிப்பூசித்தே முட்டாமற் சேவித்தே நிற்பீர்
வட்டா நெட்டோ டைப்பா ரைச்சேல் மைப்பூகத்தேறித் தாவிப்போய்
நெற்றாலுற்றாலைப்பாகிற்சேர் நெய்த்தானத்தானைத் தியானித்தே

தன் கோலி - தன்னைச் சுற்றியிருப்பதாகிய
பூசல் பாசத்தையே தப்பாமல் - சண்டையிடும் பாசங்களினிடையே அகப்பட்டு அவற்றினின்று விலகிப்போகாமல்
சாகைக்கே நிற்பீர் - மரணமடைதற்கே தகுதியாயிருப்பீர்கள்
(நீங்கள்)
முற்கோலி - முன்னதாகவே ஆயத்தமாக
வட்டா நெற்றோடே - வற்றிப்போகாத நீண்ட கால்வாய்களிலுள்ள
பாரைச்சேல் - பெரிய சேல் மீன்கள்
மைப்பூகத்து ஏறித் தாவிப்போய் - கரிய மேகத்தைத் தொடக்கூடிய உயர்ந்த
பாக்கு மரத்தில் பாய்ந்து சென்று
நெல் தாள் உற்று -நெற்கதிரின் அடியில் சேர்ந்து
ஆலைப்பாகில் சேர் - ஆலையிலிருந்தெடுத்துக் கொதிக்க வைக்கப்படும் கருப்பஞ்சாற்றில் கலக்கின்ற
நெய்த்தானத்தானைத் தியானித்து - நெய்த்தானப் பெருமானை மனதில்
நினைத்து
கோலிப் பூசித்தே - பூசைக்கு வேண்டுவன தயார் செய்து பூசனை புரிந்து,
முட்டாமல் சேவித்தே நிற்பீர் - தவறாமல் வழிபட்டு நிலையான கதியைப்
பெறுவீர்களாக

அன்புடன்

ஜெயபாரதி

====
[ நன்றி : அகத்தியர்.காம் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

கருத்துகள் இல்லை: