ஞாயிறு, 11 டிசம்பர், 2016

சங்கீத சங்கதிகள் - 102

காற்றினிலே வரும் கீதம் - எம்.எஸ். ஒரு இசை சகாப்தம்
சி.வி. சந்திரமோகன்



 டிசம்பர் 11. எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களின் நினைவு தினம்.

காற்றினிலே வரும் கீதம், அன்று முதல் இன்று வரை பிரபலமாக இருக்கும், இந்தப் பாடலின் முதல் வரியே இவரின் முகவரியைச் சொல்லும். இந்த தேமதுரக் குரல் காற்றினிலே மிதந்து வந்து படித்தவன் முதல் பாமரன் வரை அனைவர் செவிகளுக்குள்ளும் நுழைந்து மனதிற்குள் இல்லையில்லை... ஆன்மாவில் கரைந்து, சங்கீதம் தெரியாதவர்களை கூட சத்தம் போட்டுப் பாட வைத்த தெய்வீககுரல் எம்.எஸ் எனறு அன்புடன் அழைக்கப்படும் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் குறையில்லா குரல்.
இசை வானில் இலட்சக் கணக்கான நட்சத்திரங்கள் இருக்கலாம். ஆனால் தேய்பிறையே இல்லாமல் முழுமதியாய் இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஒரே நிலவு எம்.எஸ். அவர்கள்தான் என்றால் அது மிகையல்ல. ஒரு சிலர் பிறந்த பின் பாடக் கற்றுக் கொண்டு பிரபலமடைவார்கள். ஆனால் வெகு சிலரே பிறக்கும்போதே இசை ஞானத்தோடு பிறப்பார்கள். அவர்களை கருவில் உருவான திரு என்று இந்த உலகமே வியந்து போற்றும். அப்படிப்பவர்களின் அட்டவளையை எடுத்துப் பார்த்தால் எம்.எஸ். அவர்களின் பெயர் அதில் அகரமாய் மட்டுமல்ல சிகரமாய் இருக்கும் என்பதில் நிச்சயம் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

நமது உள்ளங்களில் மாத்திரம் அல்ல. நமது இல்லங்களிலும் எம்.எஸ். அவர்கள் தனது சுந்தரமான குரலில் பாடிய சுப்ரபாதத்தோடுதான் அன்றைய பொழுது புலர்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
இசையாய்ப் பிறந்தவர். இசையாய் வளர்ந்தவர். இசையாய் வாழ்ந்தவர் இன்றும், இசையாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இசையரசி பாரத ரத்னா எம்.எஸ். அவர்களின் நூற்றாண்டை நினைவுகூர்ந்து இசை உலகமே அவரின் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பெயரும், புகழும் யாராலும் அவ்வளவு சுலபத்தில் எட்ட முடியாது. எம்.எஸ். அவர்களால் மட்டும் எப்படி மங்காப் புகழோடு இருக்க முடிகிறது? இது அதிர்ஷ்டமா? என்றால் நிச்சயமாக இல்லை. அயராக உழைப்பு. ஆண்டவன் அருள். அதுமட்டுமல்ல இசை என்பது ஒரு தவம். தியானம் என்ற சிந்தனையை தன்னுடைய ஆழ்மனதிலே விதைத்தார். அதனால்தான் இசை என்ற தோட்டத்தில் விதையாக விழுந்து இன்று விருட்சமாக உயர்ந்து நிற்கிறார் எம்.எஸ். என்னும் ஆல விருட்சத்தில் இன்றும் ஏராளமானப் பறவைகள் இசையாறிக் கொண்டிருக்கின்றன.
சங்கீத சாம்ராஜ்யத்தில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த இசையரசி எம்.எஸ். அவர்களின் நிலையானப் புகழுக்கு காரணம் அவர்களின் சுவாரஸ்யமான குடம்பப் பின்னணிதான். சங்கம் வளர்த்த மதுரையில் இசைப் பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தின் அங்கமாகப் பிறந்தவர் எம்.எஸ். அவர்கள்.

இவர் தாயார் ஷண்முகவடிவு. தந்தையார் சுப்ரமணிய அய்யர் என்ற ஆதர்ஷ தம்பதிகளுக்கு அருமை மகளாய்ப் செப்டம்பர் 16ம் நாள் 1916ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தாயார் ஷண்முகவடிவு ஒரு சிறந்த வீணை வித்வான். பாட்டி அக்கம்மாள் ஒரு வயலின் விதூஷகி. கருவில் இருக்கும்போதே வீணை இசையைக் கேட்டு கேட்டு உருவானதால் இன்று உலகமே வியக்கும் வண்ணம் மிகப் பெரிய இசைப் பேரொளியாய் அவர் திகழ்ந்தார்.

இனிப்பை ருசிக்கின்ற இளம் பிராயத்தில் இசையை சுவைக்கத் தொடங்கினார். தாய்ப்பாலோடு இசைப்பாலையும் ஊட்டி வளர்த்த தனது தாய் ஷண்முகவடிவின் பெயரை தன் பெயரின் முகப்பு எழுத்துக்களாய்ப் போட்டுக் கொண்டார். இவர் பெற்றோருக்கு மட்டும் குஞ்சம்மாவாக இருந்தவர் பிறந்த ஊரான மதுரையையும் தனது தாயாரின் பெயரான ஷண்முகவடிவையும் சேர்த்துக் கொண்டு இசை உலகில் எம்.எஸ். சுப்புலட்சுமி என்ற பெயரோடு வலம் வரத் தொடங்கினார்.
கர்நாடக இசை உலகின் ஜாம்பவான்கள் என்று இன்றும் போற்றப்படும் செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர், காரைக்குடி சாம்பசிவ அய்யர் மற்றும் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் ஆகியோரிடம் முறைப்படி சங்கீதம் பயின்றார்.

கர்நாடக இசை மட்டும் கற்றால் போதும் காலம் தள்ளிவிடலாம் என்று தன்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் வைத்துக் கொள்ளாமல் இந்துஸ்தானி இசையையும் கற்க விரும்பி பண்டிட் நாராயணராவ் வியாஸ் அவர்களிடம் முறைப்படி இந்துஸ்தானி இசை பயின்று அதிலும் பாண்டித்யம் பெற்றார்.
எம்.எஸ். அவர்கள் பிற்காலத்தில் சங்கீத உலகின் உச்சியில் நிற்பார் என்பதை காலமும், கடவுளும் உணர்ந்தாற்போல உச்சிப் பிள்ளையார் கோயிலில் 1927ஆம் ஆண்டு தனது முதல் மேடைக் கச்சேரியை அவர் திருச்சியில் அரங்கேற்றினார். அப்போது அவர் வயது 11 என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஒரு சாதாரண வாய்ப்பாட்டு கலைஞர் அல்ல. வரப்போகின்ற சந்ததிகள் அத்தனையுமே பாடினால் இவர் போலப் பாட வேண்டும் என்று உறுதி பூணுவார்கள் என்பதற்கு சாட்சியாக இவர் கச்சேரிக்கு வயலின் வாசித்தவர் யார் என் கேட்டால் நம்மில் பலரின் புருவங்கள் உயரும். ஆம், பாடுவது 11 வயது சிறுமிதானே என்று எண்ணாமல் அவருக்கு பக்கவாத்யமாக இன்னும் சொல்லப்போனால் பக்கா வாத்யமாக வயலின் வாசித்தவர் சங்கீத சாம்ராட் சாட்சாத் சவுடய்யா அவர்கள். மிருதங்கம் வாசித்தவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை அவர்கள்.

1927ஆம் ஆண்டு திருச்சியில் தொடங்கிய இவர் பயணம் பின் சென்னையில் தொடர்ந்தது. பாடும் திறமையைப் பெற்றவர்கள் மட்டுமே திரைப்படத்துறையில் ஆக்கிரமித்துக் கொண்டிருநத காலமது. எம்.எஸ். அவர்களின் அழகான முகத்தோற்றம் அற்புதமான குரல் வளம் இரண்டும் அவரை வௌ்ளித்திரையில் நடிகையாக அறிமுகமாக அச்சாரம் இட்டது. இவர் ஒரு பெரிய மேதை என்பதை திருச்சியில் இவரை அறிமுகப்படுத்திய அதே நடேச அய்யர் அவர்களுக்கு மனைவியாக சேவாசதனம் என்ற படத்தில் நடித்தார்.

சங்கீதமே மூச்சாக வாழவேண்டும். தனது அபார திறமையே ஊர் முழுவதும் பேச்சாக இருக்க வேண்டும் என்பதால் நடிக்கின்ற வாய்ப்பை மெல்ல மெல்ல குறைத்து முழுநேர சங்கீத விதூஷியாக அவர் மாறத் தொடங்கினார்.

பாரம்பரியமிக்க மியூசிக் அகடமி மேடையில் பாடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அந்த மேடையில் பாடுவதற்கு முன் பல்வேறு கடினமான தேர்வு முறைகளை கடந்தாக வேண்டும்.

அனுபவமிக்க வித்வான்கள் மட்டுமே பாட முடியும் என்ற கோட்பாடுகள் நிறைந்த மியூசிக் அகாடமி எம்.எஸ். அவர்களின் அபாரத் திறமையறிந்து கோட்பாடுகளைத் தளர்த்தி, முதன் முறையாக 13 வயதே நிரம்பிய எம்.எஸ். அவர்களுக்கு மேடையை அளித்தார்கள். இது நடந்தது 1929ல்.
மியூசிக் அகடமி மேடை அவருக்கு வழங்கிய வாய்ப்பு பல இலட்சக்கணக்கான இசை ரசிகர்களை இவர்பால் ஈர்த்தது. விளைவு இளம் வயதிலேயே பிரபலமானவர்கள் வரிசையில் எம்.எஸ். அவர்கள் இடம் பெற்றார்.

இவர் பாடாத சபாக்களே இல்லை என்ற நிலை உருவானது. இந்திய தேசம் முழுவதும் இவரின் ஈடு இணையில்லா குரல் கேட்டு மயங்கியது. கடல் கடந்தும் இந்தக் கானக்குயில் தனது இசைப் பயணத்தைத் துவங்கியது.
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா என்ற மூதறிஞர் ராஜாஜி அவர்களால் இயற்றப்பட்டு இவரது வசீகரக் குரலால் பாடப்பட்டப் பாடல் பட்டித் தொட்டியெல்லாம் பிரபலமானது. சங்கீத ஞானம் உள்ளோர் மட்டுமல்ல சாதாரண ரசிகன் மனத்திலும் இந்தப் பாடல் நீங்கா இடம் பெற்றது.

ஆதிசங்கர பகவத் பாதாள் அருளிய பஜகோவிந்தம், எம்.எஸ். அவர்களின் குரல் வளத்தால் ஜொலித்தது. ஆன்மிக அன்பர்கள் உள்ளங்களில் எல்லாம் அது இனம்புரியாத உணர்வை பிரதிபலித்தது. எம்.எஸ். அவர்களின் புகழ் எங்கும் எதிரொலித்தது.

மீரா படத்தில் மீரா கதாபாத்திரம் ஏற்று இவர் பாடிய காற்றினிலே வரும் கீதம் பாடலை முணுமுணுக்காத உதடுகளைக் காண்பது அரிது. இப்படி இவர் பாடியதால் மட்டுமே பிரபலமானப் பலப்பாடல்களை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.

எம்.எஸ். அவர்களின் குடும்ப வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடாது போனால் கட்டுரை நிறைவு பெறாது. எம்.எஸ். அவர்கள் இசையை எவ்வளவு நேசித்தாரோ அதே அளவு இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிகமாக தன் குடும்பத்தை நேசித்தார். குறிப்பாக அவரது கணவர் திரு. சதாசிவம் அவர்கள் எம்.எஸ்.ஸின் நிழலாக இருந்தார் என்று பார்ப்பவர்கள் சொல்வார்கள். ஆனால் சதாசிவம் அவர்கள் நிழலில் தான் வாழ்ந்ததையே எம்.எஸ். அவர்கள் பெருமையாகக் கருதினார்.
அவர் உயிர் நீத்த பின் தனது இன்னொரு உயிரான இசையை பொது நிகழ்ச்சிகளில் பாடுவதை அடியோடு நிறுத்தினார்.

இசைத் துறையில் சாதிப்போர்க்கு கிடைக்கும் அத்துணை விருதுகளும் இந்த இசைக்குயிலின் இல்லம் தேடி வந்து தன்னை பெருமைப்படுத்திக் கொண்டன.

பத்மபூஷன், சங்கீத நாடக அகடமி, சங்கீத கலாநிதி, பத்மவிபூஷன் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல 1998ல் அவருக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக அவர் நியமிக்கப்பட்டார். அதே திருப்பதியில் எம்.எஸ். அவர்களுக்கு மிகப் பெரிய வெண்கலச் சிலையை ஆந்திர அரசு நிறுவியது. கர்நாடக சங்கீத உலகிற்கு எம்.எஸ். மூலமாக கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

இறைவன் தனக்கு அளித்த இசையின் மூலமாக கிடைத்த பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் தனக்கென வைத்துக் கொள்ளாமல் இல்லாமல் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வாரி வழங்கியவர் எம்.எஸ். அவர்கள்.
பாரத தேசமே போற்றித் துதிக்கும் மஹாப் பெரியவர், மகாத்மா காந்தி ஆகிய இருவரும் தன் இசையை ரசித்துக் கேட்டதை தனது பாக்கியமாக எம்.எஸ். அவர்கள் கருதினார். மூதறிஞர் ராஜாஜி, பண்டித நேரு ஆகிய இருவருமே எம்.எஸ். அவர்களின் இசைக்கு ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டித நேரு அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டார். இந்த இசை அரசியின் முன் நான் ஒரு சாதாரண பிரதம மந்திரி மட்டுமே என்றார்.
ஆம். இந்த வரிகள் சத்தியமான வரிகள். இசையரசியாய் இன்றும் இவர் நம் மனங்களில் எல்லாம் தனது ஈடு இணையில்லா இசை மூலம் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார் என்பது நிதர்சனம்.

இந்தப் பிரபஞ்சம் இருக்கும் வரை எம்.எஸ். அவர்களின் பாடல்கள் காற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கும். இசை வானில் அவர் பெயரும் புகழும் ஜொலித்துக் கொண்டேயிருக்கும். வாழ்க அவர் புகழ்.

[ நன்றி:  


2 கருத்துகள்:

R.S.KRISHNAMURTHY சொன்னது…

கர்நாடக சங்கீததின் சாராம்சத்தைக் குடித்துக் கருத்துச் சொல்லுவர்களும், இந்த இசைபற்றிய மிகக் குறைந்த ஞானம் பெற்ற பாமரனும் ரசிக்கும் இசை இவருடையது! எவ்வளவு அளவு, எவ்வளவு தடவை எழுதினாலும் (அவருடைய இசையைப் போலவே!) மீண்டும் படிக்கத் தோன்றும்!! சிலபேர் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பது நமது பாக்கியம்!!

R.S.KRISHNAMURTHY சொன்னது…

கோபுலுவின் அந்தப் படமும் திரு.சி.வி.சந்திரசேகரனின் எழுத்தும் உயர்தரம். தங்களுக்கு நன்றி!!