சனி, 22 அக்டோபர், 2016

ரா.பி.சேதுப்பிள்ளை -3

மிதிலைக் காட்சி
பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை

ரா.பி.சேதுப்பிள்ளையின் உரைநடைக்கு இதோ ஒரு காட்டு!
=====================

மாலைப் பொழுதில் மெல்லிய தென்றல் மிதிலை மாநகரில் வீசுகின்றது. மாடங்களில் அமைந்த மணிப் பூங்கொடிகள் அசைந்தாடுகின்றன. அரச வீதியின் இருமருங்கும் வரிசையின் விளங்கிய வீடுகளினின்றும் எழுந்த வீணையொலி வானின் வழியே தவழ்ந்து வருகின்றது.முத்துப்போற்பூத்து, மரகதம்போற் காய்த்து, பவளம்போற் பழுத்து இலங்கும் கமுகு மரத்திற் கட்டிய ஊஞ்சலில் பருவ மங்கையர் பாடி ஆடுகின்றார். பூஞ்சோலைகளில் பளிங்கு போன்ற பந்துகளை வீசிப் பிடித்துப் பாவையர் விளையாடுகின்றார். அரங்குகளில் நடனமாதர் கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்லக் களிநடம் புரிகின்றார். இத்தகைய இன்பம் நிறைந்த அணிவீதியில் கோமுனிவர் முன்னே செல்கின்றார்.மஞ்செனத் திரண்ட மேனியும் கஞ்சமொத் தலர்ந்த கண்களும் வாய்ந்த இராமன் அவர் பின்னே செல்கின்றான். பொன் மேனி வாய்ந்த இலக்குவன் அவன் பின்னே போகின்றான்.
                                                                      1
அப்பெரு வீதியில் அமைந்த கன்னிமாடத்தின் மேடையிலே மிதிலை மன்னன் மகளாய சீதை மெல்லிய பூங்காற்றின் இனிமையை நுகர்ந்து இன்புறுகின்றாள். அருகே அமைந்த அழகிய துறையில் அன்னம் பெடையோடு ஆடக் கண்டு களிக்கின்றாள். அந்நிலையில் கன்னிமாடத்தின் மருங்கே செல்லும் கமலக்கண்ணன் மேடையிலே இலங்கும் மின்னொளியை நோக்குகின்றான். பருவமங்கையும் எதிர் நோக்குகின்றாள். இருவர் கண்நோக்கும் இசைகின்றன; காமனும் ஒரு சரம் கருத்துற எய்கின்றான். பருகிய நோக்கெனும் பாசத்தாற் பிணிப்புற்ற இராமன், காதலை மனத்திற் கரந்து, வீதியின் வழியே சென்று மறைகின்றான்.

சீதையின் கண்வழிப் புகுந்த காதல் நோய் பாலுறுபிரை யெனப் பரவுகின்றது. வீதிவாய்க் கண்ட வீரனது கோலத்தைத் தன் உள்ளத்தில் அழகொழுக எழுதிப் பார்க்கின்றாள்.

காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் மையல் நோயால் நையலுறுகின்றாள். அகத்தில் நிறைந்து நின்ற அஞ்சன வண்ணத்தை அந்திமாலையிற் கண்டு நெஞ்சம் தளர்கின்றாள். இராப் பொழுதில் எங்கும் அமைதி நிலவுகின்றது. உறக்கமின்றி வாடி வருந்துகின்றாள். அருகிருந்த சோலையில் ஓர் அன்றிற் பறவை அரற்றுகின்றது. துணையின் பிரிவாற்றாது அரற்றிய பறவையின் குரல் சீதையின் காதலைக் கிளருகின்றது. அப்போது மங்கை அக் குரலெழுந்த திசையை நோக்கி,

வெளிநின் றவரோ போய்மறைந்தார் 
  விலக்க ஒருவர் தமைக்காணேன் 
எளியள் பெண்என் றிரங்காதே 
  எல்லி யாமத் திருளூடே 
ஒளியம் பெய்யும் மன்மதனார் 
  உனக்கிம் மாய முரைத்தாரோ 
அளியன் செய்த தீவினையே 
  அன்றி லாகி வந்தாயோ' 

என்று பழிக்கின்றாள். அந்நிலையில் வெண்திங்கள் வானத்திற் கதிர் வீசி எழுகின்றது. சீதையின் காதல் மேன்மேலும் பொங்குகின்றது. கரு நெருப்பாய்த் தோன்றிய இருளின் இடையே எழுந்த வெண்ணெருப்பே என்று வெம்மை விளைத்த விண்மதியை வெறுக்கின்றாள். அடியுண்ட மயில் போல் அமளியிற் குழைந்து விழுகின்றாள். இராப் பொழுது இவ்வாறு கழித்தொழிகின்றது. காலையில் எழுந்த கதிரவன் ஒளியால் கன்னிமாடத்தினருகே அமைந்த பொய்கையில் செங்கமலங்கள் இதழ் விரிந்து மலர்கின்றன. இரவு முழுவதும் கண்ணுறங்காது வருந்திய சீதை சிறிது களைப்பாறுமாறு அக் கமலப் பொய்கையின் அருகே செல்கின்றாள்.





 ஆண்டு மலர்ந்து நின்ற செந்தாமரை மலர்களில் தன் காதலனது கண்ணின் நிறத்தைக் காண்கின்றாள். அம்மலர்களைச் சூழ்ந்து படர்ந்திருந்த தாமரை யிலைகளில் தன் அன்பனது மேனியின் நிறத்தைக் காண்கின்றாள். கண்ணுளே நின்ற காதலனது கண்ணின் நிறமும் மேனியின் வண்ணமும் காட்டி ஒருவாறு மனவாட்டம் தீர்த்த கமலப் பொய்கையை நோக்கி,

பெண்இவண் உற்ற தென்னும் 
  பெருமையால் அருமை யான 
வண்ணமும் இலைக ளாலே 
  காட்டலால் வாட்டத் திர்ந்தேன் 
தண்ணறுங் கமலங் காள்! என் 
  தளிர்நிற முண்ட கண்ணின் 
உண்ணிறம் காட்டி நீர் என் 
  உயிர்தர உலாவினீரே!’ 

என்று முறையிடுகின்றாள்.
                                                                       2
மிதிலை மாநகர் வீதியில் நடந்து சென்ற மூவரும் மன்னன் மாளிகையை அடைந்து தனித்தனியே கண்ணுறங்கச் செல்கின்றார்கள். கன்னிமாடத்திற் கண்ட மயிலுடைச் சாயலாளை மனத்திடை வைத்த நம்பியின் கண்ணிலும் கருத்திலும் அக் கன்னியே இலங்குகின்றாள். யாரும் யாவையும் இனி துறங்கும் இராப்பொழுது முழுவதும் நெடுந் துயரால் நலிகின்றான். அவன் காணும் பொருளெலாம் அவள் பொன்னுருவாகின்றன. அந்நிலையில் நம்பியின் உள்ளத்தில் ஒர் ஐயம் பிறக்கின்றது. மாடத்திற் கண்ட மங்கை தான் காதலித்தற்குரிய கன்னியோ அல்லளோ என்று திகைக்கின்றான். அல்லளாயின் எல்லையற்றதன் காதல் என்னாகும் என் றேங்குகின்றான். சிறிது சிந்தனையில் ஆழ்கின்றான்.' என் உள்ளம் நல்வழியிற் செல்லுமே யல்லாது அல்வழியிற் செல்லாது. ஆதலால் என் மனம் பற்றிய மங்கை யான் காதலித்தற்குரிய கன்னியேயாதல் வேண்டும் என்று தடுமாறும் உள்ளத்தைக் தேற்றுகின்றான். பொழுது புலர்ந்ததும் முனிவரும் மைந்தரும் நீராடி நியமம் முடித்து மிதிலை மன்னனது வேள்விச் சாலையை அடைகின்றார்கள்.

தன் வேள்வியைச் சிறப்பிக்க வந்த தவமுனிவனை மிதிலை மன்னன் உரிய முறையில் வரவேற்கின்றான். மூவரும் முறையாக அமர்ந்த பின்னர் மைந்தர் இருவரையும் மன்னன் மனமகிழ்ந்து பார்க்கின்றான். அவர் முகத்தின் அழகினைக் கண்ணால் முகந்து பருகுகின்றான். அவர் யாரென்று முனிவரிடம் வினயமாக வினவுகின்றான். ”அரசே இவர் விருந்தினர்; உன் வேள்வி காண வந்தார்; வில்லும் காண்பார்; பெருந்தகைமைத் தசரதன் தன் புதல்வர்”  என முனிவர் மாற்ற முரைக்கின்றார். அவர் கருத்தறிந்த மன்னன் அகமகிழ்ந்து சீதையின் மணவில்லை எடுத்துவரப் பணிக்கின்றான். மலைபோன்ற வில் மைந்தர் முன்னே வருகின்றது. அவ்வில்லின் தன்மையையும் அதனை வளைக்கும் திறலோன் அடையும் பரிசின் .பெருமையையும் சதானந்த முனிவன் விரித்துரைத்து,

அன்றுமுதல் இன்றளவும் ஆரும்.அந்தச் சிலையருகு
சென்றுமிலர் போயொளித்தார் தேர்வேந்தர் திரிந்துமிலர்
என்றுமினி மணமுமிலை என்றிருந்தேம் இவனேற்றின்
நன்றுமலர்க் குழற்சிதை நலம்பழுதா காது'

என்கின்றான். எல்லாமறிந்து கோமுனிவர் சடைமுடி துளக்கி இராமன் திருமுகத்தை நோக்குகின்றார். குறிப்பிற் குறிப்புணரும் வீரன், முனிவர் நினைந்தவெல்லாம் நினைந்து, நெடுஞ்சிலையை அனைவரும் அசைவற்றுக் கண்ணிமையாது நோக்குகின்றார். மலையெனக் கிடந்த சிலையை வீரன் மாலை போல் எடுக்கக் காண்கின்றார். இற்ற பேரோசை கேட்கின்றார். மாநிலம் நடுங்க முறிந்து விழுந்த சிலை கண்டு மண்ணவர் கண்மாரி பொழிகின்றார். விண்ணவர் பூமாரி சொரிகின்றார்.


                                                      3.
மணவில்லை வீரன் இறுத்தான் என்னும் செய்தியைச் சீதையிடம் அறிவிக்குமாறு நீலமாலை யென்னும் தோழி விரைந்தோடிச் செல்கின்றாள். ஆடையும் அணிகளும் அலைந்து குலையக் கன்னிமாடத்தை யடைந்த நீலமாலை, வழக்கம் போல் அடிபணிந்து அடங்கி நில்லாது, அளவிறந்த மகிழ்ச்சியால் ஆடுகின்றாள். பாடுகின்றாள். மதுவுண்டவள் போல் களித்தாடும் மாலையை நோக்கி, 'கந்தரி, என்ன நிகழ்ந்தது, சொல்' எனச் சீதை வினவுகின்றாள். வில்லொடிந்த செய்தியை நேராகக் கூறாது, நீலமாலை நெடுங்கதை நிகழ்த்துகின்றாள். 'மாதரசி, தசரதன் என்னும் பெயர் வாய்ந்த மன்னன் ஒருவன் உள்ளான்; அவன் கரி, பரி, தேர், காலாள் என்னும் நால்வகைச் சேனையுடையான்; சிறந்த கல்வி கேள்வியுடையான் நீதிவழுவாத நிருபன். மாரி போல் வழங்கும் வள்ளல். அன்னவன் மைந்தன் அனங்கனையும் வெல்லும் அழகுடையான்; மரா மரம் போல் வலிய தோளுடையான்; திருமாலின் குறியுடையான். இராமன் என்னும் பெயருடையான். அவன் தம்பியோடும் முனிவரோடும் நம் பதி வந்தெய்தினான். திரிபுரமெரித்த புனிதன் எடுத்த வரிசிலையைக் காண விரும்பினான். வில்லை எடுத்து வருமாறு நம் மன்னன் பணித்தான். அது வந்தடைந்தது. முன் பழகியவன் போல் நொடிப் பொழுதில் அதனை எடுத்தான். வளைத்தான். கண்டோர் நடுங்குற வரிசிலை முறிந்து வீழ்ந்தது” என்று சொல்லி முடிக்கின்றாள்.



இவ்வாறு நீலமாலை நெடுங்கதை நிகழ்த்தும் பொழுது சீதையின் மனம் ஊசலாடுகின்றது. முனிவனோடும் தம்பியோடும் போந்த தசரத ராமன் மணவில்லை இறுத்தான் என்று நீலமாலை கூறுகின்றாள். ” வில்லை வளைக்கும் திறல் வாய்ந்த வீரனுக்கு என்னை மணஞ்செய்து கொடுப்பதாக வாய்மை தவறாத மன்னன் வாக்களித்துள்ளான். இன்று வில்லை யிறுத்த வீரன் நான் வீதிவாய்க் கண்டு காதலித்த தலைமகனோ? அன்றி வேறொருவனோ? முனிவனோடு வந்த மேக வண்ணன், தாமரைக் கண்ணன், சிலையை ஒடித்தான் என்று தோழி கூறினாள். ஆம், நான் கண்ட காதலனே அவன்!” என்று உள்ளம் தேறி உடல் பூரிக்கின்றாள். ” ஒரு கால் இவ் அடையாளம் எல்லாம் அமைந்த வேறொரு வீரன் வில்லை ஒடித்திருப்பானோ? அவன் வேறு, இவன் வேறு என்றால் என் செய்வேன்? நான் வீதியிற் கண்ட காதலனும் வில்லை யொடித்த வீரனும் ஒருவனே யெனில் அவனை மணம் புரிவேன்; இன்றேல் ஆவி துறப்பேன்! “ என்று உறுதி கொள்கின்றாள்.
                                                                  4
வில்லை யொடித்தமையால் மிதிலை மன்னன் மங்கையை மணத்தற்குரியனாய இராமன் மாளிகையில் விருந்தின னாயிருக்கின்றான். மண மகனாக அனைவராலும் மதிக்கப்படுகின்றான். எனினும் அவன் உள்ளம் அமைதியுறவில்லை; வில்லிறுத்ததன் பயனாகப் பெற்ற மங்கை, மேடையிலே கண்ட மாதோ, அல்லளோ என்னும் ஐயத்தால் அலமருகின்றது. அம் மங்கையை நேராகக் கண்டாலன்றி ஐயம் தீருமாறில்லை எனக் கருதி அவ்வேளையை எதிர்பார்க்கின்றான். திருமணத்தைச் சிறப்பித்தற்குரிய அரசரும் பிறரும் மிதிலையில் வந்து நிறைகின்றார்கள். தசரத மன்னன், மிதிலையர்கோன் அழைப்பிற்கிணங்க, நால்வகைச் சேனையோடும் உற்றார் உறவினரோடும் எழுந்து வருகின்றான். கோசலநாட்டு வேந்தனை மிதிலை வேந்தன் அன்புடன் வரவேற்கின்றான். இருபெரு வேந்தரும், குறுநில மன்னரும், அருந்தவ முனிவரும் அரச சபையில் நிறைத்திருக்கிறார்கள்.

சீதையை அலங்கரித்துச் சபைக்கு அழைத்துவருமாறு மிதிலை மன்னன் பணிக்கின்றான். இயற்கை யழகு வாய்ந்த சீதையை நல்லணிகளால் அழகு செய்து தோழியர் அழைத்து வருகின்றார்கள். அன்னமும் அரம்பையரும் நாண அழகுற நடந்து சீதை மணி மன்றத்தினுள்ளே வருகின்றாள். அங்கு நிறைந்திருந்த மாந்தர் விழித்த கண்ணிமையாது நோக்குகின்றார். வில்லை யிறுத்த வீரன் மங்கையைக் காண்கின்றான். தான் முன்னமே கண்டு காதலித்த கன்னியே அவள் என்றறிந்து உளங் குளிர்ந்து விம்முகின்றான். திருமகளுக்குரிய திருமாலே தலைமகனாக வந்தான் என்று வசிட்டமா முனிவர் வாயார வாழ்த்துகின்றார். ”நலமெலாம் ஒருங்கேயமைந்த இந்நங்கை பரிசென்றால் இராமன் இச்சிலையை மட்டுமோ ஒடிப்பான்? ஏழு மலையையும் தகர்ப்பானே”  என்று கோசிக முனிவர் இறுமாந்திருக்கின்றார். அங்கிருந்த குறுநில மன்னர் முதலாயினோர் கைகூப்பித் தொழுகின்றார்கள். சீதை அழகுற நடந்து தாதையருகில் இட்ட தனியாசனத்தில் அமர்கின்றாள்.

மன்றத்தின் நடுவே யமர்ந்தும் சீதையின் மனத்தில் நிகழ்ந்த ஐயம் தீரவில்லை. வில்லிறுத்த வீரனை நேராகக் கண்டு ஐயத்தை அகற்ற ஆசைப்படுகின்றாள். அவ் வாசையை நாணம் இடைநின்று தடைசெய்கின்றது. கண்ணெடுத்துப் பார்க்குமாறு உந்தும் காதலைப் பெண்மைக்குரிய நாணம் எதிர்த்து அடக்குகின்றது. ஆசையும் அழிவுறாது பெண்மையும் வசையுறாது கடைக்கண்ணால் நோக்குதல் சாலும் என்றெண்ணுகின்றாள். நடந்து வருகையில் நிலை குலைந்திருந்த கை வளைகளைத் திருத்தத் தலைப்படுகின்றாள். சீதையின் திருமுகச் செவ்வியை நோக்கியிருந்த கண்களெல்லாம் அவள் கை வளை வரிசையில் ஈடுபடுகின்றன. அந்நிலையில் எதிரே இருந்த இராமனைக் கடைக்கண்ணால் கண்டு இன்புறுகின்றாள். கன்னிமாடத்தின் மேடையிலே நின்று கண்ட காதலனே வில்லை யொடித்த வீரன் என்று தெளிகின்றாள். கண் வழிப்புகுந்த தன் கருத்தில் உறைந்த காதலன் வடிவத்தைத் தன்னெதிரே அமர்ந்திருந்த இராமனிடம் கண்டு களிக்கின்றாள். இத்தகைய காதலர் இருவருக்கும் மறுநாட் காலையில் திருமணம் நிகழ்கின்றது.

மிதிலைக் காட்சியென்னும் காதலர் காட்சியில் கம்பர் அமைத்துள்ள நாடகக் கூறுகள் யாவருக்கும் நன்கு விளங்கும். உருவிலும் திருவிலும் ஒத்த தலைமகனும் தலைமகளும் ஊழ்வினைப் பயனால் ஒருவரை யொருவர் எதிர்ப்பட்டுக் காதலுறுதலும், அம் மையலை மனத்திலடக்கி நையலுறுதலும், பின்பு அதனை யறிந்த பெற்றோர் காதலர் இருவருக்கும் திருமணம் முடித்தலும் தமிழ்நாட்டுப் பழைய மணமுறையாகும். இன்னும் ஓர் ஆடவனைக் காட்சியாற் காதலுற்ற பின்னர் மற்றொருவனை மனத்திலும் தீண்டாத மாட்சி நிறையமைந்த மங்கையர்க்குரியதாகும். அறநெறி திறம்பாத அருங்காதலை மங்கையர் உயிரினும் உயர்வாகப் போற்றுவர். இத்தகைய அறநெறிக்குச் சான்றாக நின்ற சீதையின் காதலை ஒர் களவியல் நாடகமாக அமைத்தருளிய கம்பர் கவித்திறம் அறிந்து போற்றத் தக்கதாகும்.

[ நன்றி. கம்பன் கவிதை- நவயுகப்பிரசுராலயம் ;  கம்ப மலர்: அகில இலங்கைக் கம்பன் 15ஆம் ஆண்டு நினைவு மலர் 1980-1995; ஓவியங்கள்: சக்தி விகடன்]

தொடர்புள்ள பதிவுகள்:

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

i have heard that sethupillai iyyah was very profficient in english and in sanskrit also.
tamil scholars were profficient in other languages also ...those days...

THIRUMALAI சொன்னது…

பள்ளி நாட்களுக்கு பின் ரா பி அவர்களின் எழுத்தை இன்று தான் பார்க்கிறேன். வார்த்தைகளின் வசீகரம் அற்புதமானது. பகிர்ந்தமைக்கு நன்றி!

Unknown சொன்னது…

tamil scholars proffessors were profficient in english and in sanskrit those days
but modern day tamil scholars including vairamuthu do not care to learn other languages
i have read TAMIL PROFFESSORS ELAKKUVANAR PARANTHAMANAR S.P ANNAMALAI A.C CHIDAMBARANATHAN CHETTIAR.. KI VA JAGANATHAN NAA PAARTHASARATHY WERE GOOD AT ENGLISH ALSO.
BUT ALAS....TODAY