புதன், 30 மார்ச், 2016

ஆனந்தரங்கம் பிள்ளை

ஆனந்தரங்கம் பிள்ளை

 மார்ச் 30. ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம். 


அவரைப் பற்றியும், அவருடைய நாட்குறிப்பைப் பற்றியும் வந்த இரண்டு கட்டுரைகள் இதோ ! 


முதலில் வெங்கடேசன் என்பவர் தினமணியில் எழுதிய கட்டுரை:
===== 

தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிம்ம மகாராஜாவுக்கு கடன் கொடுக்கும் அளவுக்குப் பெரிய செல்வந்தர். தென்னிந்திய அரசியலில் சாணக்கியராகத் திகழ்ந்த அவர் "ஆனந்த புரவி" எனும் கப்பலுக்குச் சொந்தக்காரர். வெளிநாட்டு வணிகங்களுக்கு இக்கப்பலை அவர் பயன்படுத்தியுள்ளார். ஆனந்தரங்கரின் காதோ எலிக்காது. கண்ணோ கருடனின் கண். இந்த நாள்குறிப்பின் உயிர்நாடியே இவைகள்தான்.

பிறப்பு: சென்னையில் உள்ள பெரம்பூரில் 30.03.1709 அன்று பிறந்தார். மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார்.

இயற்பெயர்: ஆனந்தரங்கப் பிள்ளை

பெற்றோர்: திருவேங்கடம்

தொழில்: வணிகம், அரசியல், மொழிபெயர்ப்பாளர்

மொழிப்புலமை: தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு, சம்ஸ்கிருதம், போர்ச்சுகீசியம் எனப் பல மொழிகளை அறிந்தவர்.

பணி: டியுப்லெக்ஸ் பிரபு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருந்த கனகராய முதலி என்பவர் இறந்ததால், பன்மொழியறிவு பெற்ற ஆனந்தரங்கம் 1747 இல் அப்பணிக்கு அமர்த்தப்பட்டார்.

1736 செப்டம்பர் 6ம் தேதி தொடங்கப்பட்ட நாள்குறிப்பு 1760 செப்டம்பர் 6ம் தேதியுடன் முடிகிறது.

இந்த நாள்குறிப்பு முழுவதும் ஒரே நடையில் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

1846 ஆம் ஆண்டு கலுவா மோம்பிரன் என்ற தமிழ் அறிந்த பிரெஞ்சுக்காரர் ஆனந்தரங்கப் பிள்ளையின் மாளிகையில் நுழையும் போதுதான் அவரது நாள்குறிப்பேடுகள் மானிடக் கண்களுக்குத் தெரிய வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

இவர் அரசியலிலும், வணிகத்திலும் தீவிரமாக ஈடுபட்ட காலங்களில் எழுதப்பட்ட நாள்குறிப்புகள் 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இருபத்தைந்து ஆண்டு கால தமிழக, இந்திய, உலக அரசியல், பண்பாட்டு, சமயச் செய்திகளை வெளிப்படுத்தி உள்ளன.

மோம்பிரன் தான் கண்டுபிடித்த நாள்குறிப்பை தன் சொந்த உபயோகத்துக்காக ஒரு பிரதி எடுத்து வைத்துக் கொண்டார். பின்பு தமிழில் இருந்தவற்றை பிரெஞ்சில் மொழியாக்கம் செய்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னால், பிரெஞ்சு அரசின் கீழ் புதுவையில் செயல்பட்ட எதுவாத் ஆரியேல் என்பவர், மூல நாள்குறிப்பை பிரதி எடுத்து பாரீஸ் தேசிய நூலகத்தில் சேர்த்தார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் சென்னை ஆவணக் காப்பகத்தின் காப்பாளராக இருந்த ஹெச். டாட்வெல்லின் உதவியோடு நாள்குறிப்பு முழுதும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. பின்னர் அது 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டது. இந்த வேலை 1917ல் தொடங்கப்பட்டு 1928ல் முடிக்கப்பட்டது.

ஆனந்தரங்கப் பிள்ளை பல மொழிகள் அறிந்திருந்தும், தனது நாள்குறிப்பை தாய்மொழியான தமிழில்தான் எழுதினார் என்பதில் தமிழ்த்தாய்க்குப் பெருமையே. இருந்தும் அவரது நாள்குறிப்பு பிரெஞ்சு மொழியில்தான் முதன்முதலில் மக்களுக்குப் படிக்கக் கிடைத்தது. பின்னர் ஆங்கிலத்தில் கிடைத்தது.

நாள்குறிப்பு எழுதப்பட்டு ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் தமிழில் கிடைத்தது. அதுவும் முழுமையாக இல்லை.

அன்று வரை நாள்குறிப்பு தமிழில் கிடைக்காதது குறித்து வருத்தப்பட்ட புதுவையில் உள்ள பிரெஞ்சுத் துணைத் தூதரகம் முழு முயற்சி எடுத்து 1948 ஆம் ஆண்டு வேலையைத் தொடங்கியது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து புதுச்சேரி சுதந்திரம் பெற்றது. அதன்பின் அந்த அச்சுவேலை கிடப்பில் போடப்பட்டிருக்க வேண்டும்.

தமிழில் படிக்க ஆனந்தரங்கப் பிள்ளை நாள்குறிப்பு கிடைக்கவில்லையே என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்த தமிழர்களுக்கு புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் புண்ணியம் கட்டிக் கொண்டது.

1998ம் ஆண்டு நாள்குறிப்பின் முதல் எட்டு தொகுதிகளை ஒன்பது நூல்களாகப் பதிப்பித்தது. கடைசி நான்கு தொகுதிகளை 2005ல் பதிப்பித்து 2006ல் வெளியிட்டது. ஆனந்தரங்கப் பிள்ளையின் நாள்குறிப்பைப் பற்றித் தெரிந்தவர்கள் அது விலை மதிப்பில்லா அரிய பொக்கிஷம் என்று அறிவர்.

கலுவா மோம்பிரன் மட்டும் ஆனந்தரங்கரின் மாளிகை அழகை மேம்போக்காக இரசித்துக் கொண்டு சென்றிருப்பாரேயானால், இந்த நாள்குறிப்பு மக்கி மண்ணாய்ப் போயிருக்கும். தமிழ்த்தாயின் மகுடத்தில் ஒரு வைரக்கல் குறைந்து போயிருக்கும். பதினெட்டாம் நூற்றாண்டுப் புதுச்சேரியின் வரலாறு இன்னும் இருட்டிலேயே மூழ்கிக் கிடந்திருக்கும்.

புதுவை மாநில ஆளுநர்களில் சக்கரவர்த்தி என்று குறிப்பிடப்படும் டூப்ளேயின் வாழ்க்கை வரலாற்றில் நமக்குப் பல அத்தியாயங்கள் கிடைக்காமலே போயிருக்கும். 1741 மார்ச்சில்,

    மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது

    இலஞ்சம் கொடுத்துப் பணி பெறுவது

    கண்ட இடங்களில் மலம் கழிப்பவர்க்குத் தண்டனை தருவது

    கிறிஸ்தவ கோயிலில் தாழ்த்தப்பட்டவருக்கும் ஏனையவர்க்கும் தனித்தனி இடம் ஒதுக்கியதால் பிரச்னை ஏற்பட்டது

    பிரமாண்டமாக நடந்த திருமண நிகழ்ச்சிகள், சிறப்பு நிகழ்ச்சிகள்

    சாதிச் சண்டைகள் குற்றங்களுக்கு வழங்கப்பட்ட விசித்திரமான தண்டனைகள்

    வணிகம் பற்றிய ஏராளமான செய்திகள்

அரசியல் சதுரங்கத்தில் ஆனந்தரங்கர் நகர்த்திய காய்கள் எவ்வாறு வெற்றியைத் தந்தன முதலிய பல்வேறு செய்திகளை அறிய முடிகிறது.

அரசாங்கத்தில் துவிபாசி பதவி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆளுநர் கூடவேயிருந்து அரசாங்க நடப்புகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்புடையவர் அவர். அரசாங்கம் என்று ஒன்றிருந்தால், அதன் இரகசியம் என்று பல இருக்கும். இவற்றை வேறு யார் காதிலும் போடக்கூடாது என்ற எண்ணத்தோடு, தன் குறிப்பேடுகளுக்கு மட்டும் கூறியிருக்கிறார் ஆனந்தரங்கர்.

ஆனந்தரங்கரின் காதோ எலிக்காது. கண்ணோ கருடனின் கண். இந்த நாள்குறிப்பின் உயிர்நாடியே இவைகள்தான். பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் புதுச்சேரியின் நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு அது "டூப்ளே கால" இந்தியாவையும் படம்பிடித்துக் காட்டுகிறது.

தம் நாட்குறிப்புகளுக்கு தினப்படிச் செய்திக்குறிப்பு. சொஸ்த லிகிதம் என்றே பெயரிட்டார்.

அரசியல் சூழ்ச்சிகள், சமுதாய நிகழ்ச்சிகள், கலகங்கள், முற்றுகைகள், கப்பல் போக்குவரவு, வாணிபநிலை, முகல் மன்னர் நடத்தை, நவாப் தர்பார், ஆங்கிலேயரின் போக்கு, பிரெஞ்சுக்காரரின் அரசாளும் முயற்சி, அக்கால மக்கள் பட்டபாடு, அந்நியர் அடித்த கொள்ளை, புதுச்சேரி, ஆர்க்காடு, வந்தவாசி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, ஐதராபாத், தில்லி முதலிய இடங்களில் நடந்த சம்பவங்கள், போர்த் தந்திரங்கள், டூப்ளே, டூப்ளே மனைவி, இலபூர்தோனே, பராதி, இலாலி தொல்லாந்தால் போன்றவர்களின் வீரப் பராக்கிரமங்கள், அவர்களின் உரையாடல்கள் ட்யுப்லெக்ஸ் பிரபு, இல்பூர்தோனே, பாரதி, தாமஸ் ஆர்தர்(பேரோன்-டி-தொல்லென்டால்), முதலிய பிரெஞ்சுத் தலைவர்களின் தன்மை, அக்காலப் பிரமுகர் வரலாறுகள், நீதியுரைகள், ஜோதிட குறிப்புகள், புலமையளவு முதலிய பலவற்றையும் தன் நாள்குறிப்பில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார். எல்லோருக்கும் புரியும் வண்ணம் தமிழிலே எழுதப்பட்டிருக்கிறது.

ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு அக்காலப் பேச்சுத்தமிழ், சொற்கள், சொற்றொடர்கள், இலக்கணக் கூறுகளை எடுத்துரைக்கிறது.

பிறமொழிகளிலிருந்து கடன் பெற்ற சொற்கள், அன்று வழங்கி, இன்று வழக்கிழந்த சொற்கள் முதலியவற்றையும் அவ ரது நாட்குறிப்புகள் வாயிலாக அறியலாம்.

அருணாசலக் கவிராயர் தம் இராம நாடகத்தைத் திருவரங்கத்திலே அரங்கேற்றிய பிறகு, மீண்டும் ஒரு முறை ஆனந்தரங்கம் முன்னிலையில் அரங்கேற்றினார் என்று குறிப்பிடுவர்.

பல மொழிகளில் ஆனந்தரங்கர் புலமையுடையவர் என்பதை நாள்குறிப்பை நாம் புரட்டும்போதே தெரிந்து கொள்ளலாம். புலமைப்பற்று கொண்டு பல புலவர்களுக்கு உதவிய புரவலராயிருந்த ஆனந்தரங்கர், தன் நாள்குறிப்பை பண்டிதத்தமிழில் எழுதாமல் மக்கள் தமிழிலேயே எழுதினார் என்பது ஒரு சிறப்பு அம்சமாகும்.

ஆனந்தரங்கரின் ஜூன் இருபத்தொன்றாம் நாள் சேதிக் குறிப்பு தேவனாம்பட்டினம் போர் பற்றிய அனைத்துத் தகவல்களையும் முன்வைக்கிறது. ஆளுநரைப் பார்க்கச் செல்லும் ஆனந்தரங்கரிடம், "நம்முடையவர்கள் நேற்று இராத்திரி போனவர்கள் கூடலூர் பிடிச்சுக் கொண்டார்களாம். செவுரோடு விழுந்தார்கள். தன் பேரிலே உள்ள சிறுது இராணுவுகள் கறனட்டகஸ்தானிருந்தார்கள். அவர்களையெல்லாம் வெட்டினார்களாம். கொஞ்சநஞ்சம் பேரிருந்தவர்கள் கதவைத் திறந்து ஓடச்சே வெளியிலே நம்முடையவர்கள் பிடித்துக்கொண்டு சரி கட்டிப் போட்டதாகவும் சிறிதுபேர் தப்பி ஓடிப்போனதாகவும் இப்படியாக ஒருத்தன் வந்து இப்போதான் மதாமுடனே சொன்னான். ஆனால் வெகுபேர்கள் செத்துப்போயிருப்பார்கள். வெகு சாக்குகளிருக்குமென்று" கடலூர் பிடிபட்ட தகவலைக் கூறுகிறார் ஆளுநர்.

ஆளுநரின் இந்த வெற்றி எக்களிப்பிற்குப் பின் அவர் மனத்திலோடும் எண்ணங்களை அறிந்தவர்போல் "துரையவர்களுக்கு பெண்சாதியித்தனை நிர்வாகம் பண்ணிக்கொண்டு தமக்கு அலுவலில்லாமல் பண்ணி நடப்பித்துக் கொண்டு போரானே யென்கிற உச்சாகம் ஒரு பாரிசம் தோற்ற, மற்றொரு பாரிசம், தன் பெண்சாதியைத் தொட்டு கூடலூர் தேவனும் பட்டணம் பிடச்சோமென்கிறது, சீர்மையிலே பிராஞ்சு இராசா முதலான இராசாக்கள் யெல்லாம் கொண்டாடலும், இந்தியாவிலே இருக்கப்பட்ட துலுக்கர் முதலான நபாபுகள், அமீர்கள், இராசா முதலாகிய பேர்கள், முன் சென்னப்பட்டணம் முசியே இலபுர்தொன்னே பிடித்துப் போட்டுபோக, யிவரைக் கொண்டாட கிடைச்சாப்போலே, இப்போதான் பெண்சாதியைக் கொண்டாடுவார்கள் என்கிற உச்சாகம் சரீரம் பூரிக்கப்பண்ண, யிந்தமட்டிலே இவள் யோசனையின் பேரிலே யல்லோ கூடலூர் சுறாயசமாய் கைவச மாச்சுதென்று சந்தோஷம்'' என்று எழுதுகிறார் அரங்கர்.

ஆனந்தரங்கத்தினுடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி என கே.கே.பிள்ளை பாராட்டியுள்ளார்.

ஆனந்தரங்கம் குறித்து வெளிவந்துள்ள இலக்கியங்கள்:

ஆனந்தரங்கம் இந்து மதத்தையும் கலைகளையும் தமிழ், தெலுங்குப் புலவர்களையும் போற்றி வந்துள்ளார். நமசிவாயர், கஸ்தூரி ரங்கையார், தியாகராச தேசிகர் போன்ற தமிழ்ப் புலவர்களை இவர் ஆதரித்துள்ளதாகத் தெரிகிறது. இவரின் நாட்குறிப்பில் வேதபுரீசுவரர் கோவிலுக்கு செய்த தொண்டுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனந்தரங்கம் பிள்ளை குறித்து வெளிவந்த நூல்கள்:

ஆனந்தரங்க கோவை

ஆனந்தரங்கன் தனிப்பாடல்கள்

கள்வன் நொண்டிச் சிந்து

ஆனந்தரங்கம் பிள்ளைத் தமிழ் எழுதியவர் - அரிமதி தென்னகன்

ஆனந்தரங்கம் புதினங்கள்

ஆனந்தரங்கம் விஜயசம்பு எழுதியவர் - சீனிவாசர் (வடமொழி நூல்)

சரித்திரம் படைத்த இந்தியர்களின் சரித்திரத்தை வெள்ளைக்காரன்தான் எழுதினான் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால், இந்தியர்களுக்கு சரித்திரக் கருத்தில்லை என்பதை ஏற்பதற்கில்லை. 1761 ஜனவரி திங்கள் 10 ஆம் தேதி இன்னுயிர் நீத்த ஆனந்தரங்கப் பிள்ளைகூட பொக்கிஷம் போன்ற நாள்குறிப்பினை விட்டுத்தானே சென்றிருக்கிறார்.

===========

அடுத்து, விகடனில் பூ.கோ. சரவணன் எழுதிய இன்னொரு கட்டுரை:
===============
·         


ஆனந்தரங்கம் பிள்ளை டைரிக்குறிப்புகள் நாட்குறிப்புகள் என்பவை கூட சுவையான ஒரு ஆவணமாக, வரலாற்றை அறிந்து கொள்ள முக்கியமான ஆவணமாக ஆகக்கூடும் என்பதை உறுதி செய்பவை. பிரெஞ்சுக்காரர்கள் புதுவையை ஆண்ட காலத்தில் இவரின் மாமா நைனியாப்பிள்ளை அவர்களிடம் துபாஷாக இருந்தார். பெரம்பலூரில் இவர் பிறந்தார். இவரின் அப்பாவை மாமா புதுச்சேரிக்கு அழைக்கவே குடும்பம் அங்கே பெயர்ந்தது. அங்கே சிறிய அளவில் ஆனந்தரங்கம் பிள்ளையின் அப்பா வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
நைனியாப்பிள்ளை அப்பொழுதைய கவர்னர் எபேருக்கு லஞ்சம் தர மறுத்து அவரை பதவி நீக்கம் செய்ய காரணமானார். கவர்னரின் மகன் இளைய எபேர் கவர்னரானதும் நைனியாப்பிள்ளை மீது பொய்யான குற்றச்சாட்டுகளை உள்ளாகி சவுக்கடி வழங்கப்பட்ட பொழுது அந்த அடி தாங்காமல் அங்கேயே இறந்து போனார். அவருக்கு நியாயம் தேடி அவரின் மகன் குருவப்பா பிரான்ஸ் தேசத்தில் அலைந்து நீதி பெற்றார்
இந்தக்காலத்தில் ஆனந்தரங்கம் பிள்ளை பாக்கு வியாபாரத்தில் இருந்து தன்னுடைய தொழிலை விஸ்தரித்து கொண்டு போனார். சாராய ஆலை, நீலத்துணி ஏற்றுமதி என்று அவரின் தொழில்கள் நீண்டன. ஆனந்தப்புரவி என்கிற பெயரில் பெரிய கப்பலை சொந்தமாக வைத்து வியாபாரம் செய்கிற அளவுக்கு அவர் வளம் மிக்கவராக இருந்தார். இவருக்கு முன்னரே இவரின் மாமா குருவப்பா குறிப்புகள் எழுதி வைத்திருந்தாலும் அவை கிடைக்காமல் போனதால் இவரின் குறிப்புகளே பிரெஞ்சு ஆட்சியை அறிந்து கொள்ள பயன்படும் மிக முக்கிய குறிப்புகளாக திகழ்கின்றன. இருபத்தி ஐந்து ஆண்டுகள் எழுதப்பட்ட அந்த குறிப்புகளில் பல்வேறு தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.
1743 ஆம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவத்தை தன்னுடைய டைரியில் பதிவு செய்கிறார் பிள்ளை. இருண்ட அறைக்குள், திடகாத்திரமான இளைஞர்கள் அழைத்து செல்லப்பட்டு மொட்டையடிக்கப்பட்ட அடிமை வேலை செய்வதற்காக மொரிஷியஸ், பிரெஞ்சு கயானா முதலிய பகுதிகளுக்கு கப்பலில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டார்கள் என்று நேர்மையாக பதிகிறார்.
கடலோரம் போய் காலைக்கடன் போகக்கூடாது என்று கவர்னர் போட்ட உத்தரவு, எப்பொழுதும் மதுவுக்கு தடை என்பதையே அறியாத மிதத்தல் மாநிலமான புதுவையில் மராத்தியர் தாக்குதலின் பொழுது ஆறு மாதம் மட்டும் விதிக்கப்பட்ட மதுவிலக்கு, சாந்தா சாகிபுக்கு அடைக்கலம் தந்திருந்த கவர்னர் துய்மாவை மிரட்டி தூதுவரை அனுப்பி ஆறு கோடி கப்பம் கேட்ட மராத்திய தளபதி ரகுஜி நாற்பது பாட்டில் பிரெஞ்சு மதுவோடு காதலியின் மது மோகத்தால் சமாதானம் ஆகிக்கொண்ட கதை நம்ப முடியாததாக இருக்கலாம். துப்ளேக்ஸ் புதுவையை ஆண்ட காலத்தில் பிள்ளை தலைமை துபாஷ் ஆக இவரிடமே லஞ்சம் கேட்ட அவரின் மனைவி ழானின் ஊழல் முகம் என்று பலவும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதே ழான் இடங்கை எனப்படும் இழிவாக நடத்தப்பட்ட மக்களுக்கு வலங்கை பிரிவினரின் பகுதிகளுக்குள் நுழைய வசதி ஏற்படுத்தி தந்ததும் பிள்ளையால் குறிக்கப்படுகிறது.
துப்ளே இவரையே தலைமை துபாஷாக நியமிக்கிறார். ஒரு துபாஷ் மக்கள் ஒழுங்காக வரி செலுத்துவதை கண்காணிப்பது,கவர்னருடன் அதிகாரப்பூர்வ தொடர்பு கொள்ளுதல், கிரிமினல் வழக்குகளில் தீர்ப்புகளை தீர்மானிப்பதில் ஆலோசனை வழங்குதல் என்பன மாதிரியான முக்கியமான பணிகளை செய்து வந்தார். அப்பொழுது கூடலூர் எனப்படும் கடலூரை வெள்ளையருடன் ஏற்பட்ட போரில் உடனே கைப்பற்ற வேண்டும் என்று துப்ளே துடிக்க ,"காபி சாப்பிடுகிற இடைவெளியில் கைப்பற்றக்கூடிய அளவுக்கு எளிய இலக்கில்லை அது ! என்றாலும் அங்கே இருக்கும் புனித டேவிட் கோட்டையை கைப்பற்றினால் ஆங்கிலேயரின் கப்பல்கள் நிற்க துறைமுகம் இல்லாமல் செய்து விடலாம் ! " என்று ஆலோசனை தருகிற அளவுக்கு அவர் அதிகாரத்தின் முக்கிய புள்ளியாக இருந்தார்.
பிரான்கோயிஸ் மார்ட்டின் எனும் கவர்னரின் காலத்தில் இருந்து வேதபுரீஸ்வரர் ஆலயத்தை சம்பக்கோயில் எனும் தேவாலயத்தின் வழிபாட்டுக்கு தொல்லை தரும் வகையில் பூஜைகளின் மூலம் சப்தம் எழுப்புகிறது என்று இடிக்க சொல்லி தொடர்ந்து பாதிரியார்கள் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அதை துப்ளே தன்னுடைய மனைவியின் மீதான ஈர்ப்பால் செய்து முடித்தார். இதுவும் இவரின் டைரிக்குறிப்புகளிலேயே காணக்கிடைக்கிறது.
1742-43 இல் சென்னையை பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி படைகள் கைப்பற்றிய பொழுது துப்ளே மகிழ்ச்சிப்பெருக்கில் துபாஷ் ஆன ஆனந்தரங்கம் பிள்ளையிடம் "என்ன வேண்டும் ?" என்று கேட்ட பொழுது "ஒரு காசுக்கு பன்னிரெண்டு வெற்றிலை கிடைத்தது. இப்பொழுது போர்க்காலம் என்பதால் ஆறு காசு,எட்டு காசு என்று வெற்றிலையின் விலை ஏறி மக்கள் துன்பப்படுகிறார்கள் ! குறைக்க முயலுங்கள் " என்று கேட்கிறார். மீண்டும் இவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டதும் ,"இருவரை தவறாக கைது செய்திருக்கிறோம். அவர்களை விடுதலை செய்யலாம் கவர்னர் !" என்றே சொல்கிறார். அடுத்த முறை அழுத்தி கேட்டதும் ,"எல்லாம் வல்ல இறைவன் மற்றும் நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன குறை ?" என்று எந்த பரிசும் பெறாமல் விலகிக்கொண்டார் பிள்ளை.
இவரின் டைரி வெகுகாலம் கண்டுகொள்ளப்படாமல் இருந்து எண்பது வருட காலத்துக்கு பின்னர் பிரான்சில் பிரதி எடுத்தனர். அதன் பின்னர் ஆங்கிலேயரும் அதை மொழிபெயர்த்து வெளியிட்டனர். வ.வே.சு ஐயர் அவரின் டைரியின் சில பகுதிகளை சித்திரகுப்தனைப் போல ஒன்று விட்டிடாமல் குறித்து வைத்த புஸ்தகமே இப்பிரதாப தினசரியாகும்என்று குறிப்பிட்டு வெளியிட்டார். தமிழ் மொழியில் பற்றுடையவராக திகழ்ந்து தமிழிலேயே கையெழுத்திட்ட பிள்ளை தன்னுடைய நாட்குறிப்புகளை பிரெஞ்சு,உருது மொழிகளை கலந்தே எழுதினார். அவரை இந்தியாவின் சாமுவேல் பெப்பீஸ் என்று அவரின் அற்புதமான நாட்குறிப்பு பதிவுகளுக்காக அழைக்கிறோம். அவரின் பிறந்தநாள் இன்று
(இந்தக்கட்டுரையின் பெரும்பாலான பகுதிகள் பிரபஞ்சன் அவர்களின் நாவல்களான மானுடம் வெல்லும்,வானம் வசப்படும் மற்றும் அவரின் பல்வேறு கட்டுரைகளை படித்ததன் தாக்கத்தில் எழுதப்பட்டது. அவருக்கு இக்கட்டுரை சமர்ப்பணம் )


[ நன்றி: தினமணி, விகடன் ] 

கருத்துகள் இல்லை: