திங்கள், 28 மார்ச், 2016

டி.கே.பட்டம்மாள் - 6

பாட்டம்மாள் 
வீயெஸ்வி 

ஆனந்த விகடனில் பிரபல இசை விமர்சகர், எழுத்தாளர்  வீயெஸ்வி  2007-இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ! 
==============

கர்னாடக இசை உலகில் முப்பெரும் தேவியருள் ஒருவராக இருந்து பட்டொளி வீசிப் பிரகாசித்தவர் டி.கே.பட்டம்மாள். வீட்டில் செல்லமாக பட்டா!
குழந்தைப் பருவத்திலேயே பகவான் ரமணராலும், காஞ்சிப் பெரியவராலும் ஆசீர்வதிக்கப்பட்டு, குருமார்கள் பலரிடம் இசை பயின்று படிப்படியாக உயர்ந்து உச்சம் தொட்டவர். காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் கூரை வேயப்பட்ட வீட்டில் விடியற்காலை மூன்றரை மணிக்கு எல்லாம் எழுந்து, சுலோகங்களையும் பக்திப் பாடல்களையும் பாடிப் பயிற்சி செய்யும்போது பட்டாவுக்கு வயது நான்கு!

வருடம் 1931. பட்டம்மாள் படித்த காஞ்சிபுரம் பெண்கள் பள்ளியில் 'சத்தியவான் சாவித்திரி' நாடகத்தை மேடை ஏற்றிய சமயம். 12 வயது பட்டம்மாளுக்கு சாவித்திரி வேடம். 'தாயார் இருந்தென்ன... தந்தையார் இருந்தென்ன?' பாடலை உணர்ச்சிப்பெருக்குடன் டி.கே.பி. பாட, குழுமி இருந்தவர்கள் கண் கலங்கி இருக்கிறார்கள். இந்த நாடகத்துக்கு அனுமதிக் கட்டணம் நாலணா. அன்று வசூலான தொகை 900 ரூபாய்!

டி.கே.பி-க்குப் பதக்கம் கிடைத்தது. மறுநாள் சுதேசமித்திரன் நாளேட்டில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியது. திகைத்துப் போனார் தந்தை. ''இதென்ன அநியாயம்? பேப்பர்ல இப்படி போட்டோ எல்லாம் வந்தா உன் பொண்ணுக்கு யாரும் மாப்பிள்ளை கொடுக்கப் போறது இல்லை. பட்டாவோட எதிர்காலம் அவ்வளவுதான்...'' என்று கிருஷ்ணஸ்வாமியின் சகோதரி கள் எட்டுப் பேரும் கூச்சல் போட்டார்கள். இன்னொரு பக்கம், பேப்பரில் செய்தியைப் பார்த்துவிட்டு கொலம் பியா கிராமபோன் கம்பெனியினர் இவரை அணுகி, பட்டம்மாளின் குரலைப் பதிவுசெய்ய அனுமதி கேட்டு இருக்கிறார்கள். தந்தைக்கு விருப்பம் இல்லை. ''கவலைப்படாதே... வெளியே மாப்பிள்ளை கிடைக்கலேன்னா என் மருமானையே பட்டம்மாளுக்குக் கல்யாணம் செய்துவைக்கிறேன்...'' என்று உறுதி கொடுத்து அவரைச் சம்மதிக்கவைத்திருக்கிறார் டாக்டர் சீனிவாசன் என்ற அவரது குடும்ப நண்பர்.

திருநெல்வேலி சபாவில் டி.கே.பி. கச்சேரி. பாரதியாரின் பாடல் ஒன்றை மெய்மறந்து பாடிக்கொண்டு இருந்தவர், முதல் வரிசையில் உட்கார்ந்து இருந்த பெண்களில் ஒருவர் கண்ணீர்விட்டு அழுதுகொண்டு இருந்ததைக் கவனித்தார். அந்தப் பெண்மணி மகா கவியின் மனைவி செல்லம்மாள். கச்சேரி முடிந்ததும், ''என் கணவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் நீங்கள் பாடியதைக் கேட்டுக் குளிர்ந்திருப்பார்...'' என்று தொண்டை அடைக்கச் சொன்னாராம் செல்லம்மாள்.

1940-ல் கீழ்த் திருப்பதியில் உள்ள திருச்சானூரில் பட்டமாவுக்குக் கல்யாணம். மணமகன் ஈஸ்வரன், முன்பே உறுதியளித்த குடும்ப நண்பர் டாக்டர் சீனிவாசனின் மருமகன். திருமண நாள் அன்று வைர அட்டிகையுடன் ஜொலித்தார் பட்டம்மாள். ''விலை மதிப்பற்ற இசை உன்னிடம் இருக்கும்போது இந்த வைர அட்டிகை உனக்கு எதற்கு?'' என்று திருமணத்துக்கு வந்திருந்த ராஜாஜி கேட்க, அதற்குப் பிறகு அந்த அட்டிகையை அணியவே இல்லையாம் டி.கே.பி!

திருமணமான புதிதில் தங்களுடன் திருநெல்வேலிக்கு வரும்படி ஈஸ்வர ஐயரை வற்புறுத்தினார்கள் இவருடைய நண்பர்கள். பட்டமாளுக்குக் கணவர் தன்னை விட்டு விட்டுத் தனியாகச் செல்வதில் விருப்பம் இல்லை. இருப்பினும், 'மனைவிதாசன்' என்று நண்பர்கள் கிண்டல் செய்வார்களே என்பதால் சம்மதித்தார் ஈஸ்வர ஐயர். ஆனால், சில மணி நேரத்துக்குள்ளாகவே வீடு திரும்பிவிட்ட அவர் சொன்னார்...
''நீ இல்லாம என்னால இருக்க முடியாது பட்டா!''

நன்றி: "Gana Saraswathi D.K.Pattammal:
Dimensions of a divine songster"  by Nithya Raj, Bharatiya Vidya Bhavan, 2007.

[ நன்றி: விகடன் ] 

*  பின் குறிப்பு:

டி.கே.பட்டம்மாள் பேசுகிறார் : 



==== 

கருத்துகள் இல்லை: