புதன், 23 மார்ச், 2016

லக்ஷ்மி -1

"லக்ஷ்மி' வாழ்க்கையிலும் எழுத்திலும் மருத்துவரே!

கலைமாமணி விக்கிரமன்

மார்ச் 23. எழுத்தாளர் மருத்துவர் லக்ஷ்மி அவர்களின் பிறந்த தினம்.


அவர் நினைவில் விக்கிரமன் தினமணியில் 2011-இல் எழுதிய கட்டுரையை இங்கிடுகிறேன் !
========================== 
 சமூக முன்னேற்றத்துக்காகச் சிறுகதைகள், புதினங்கள் எழுதிய சிறந்த எழுத்தாளர்களுள் "லக்ஷ்மி' இன்றும் விவாதமின்றிப் பேசப்படுபவர். வார, மாத இதழ்களில் குறிப்பாக அதிகம் விற்பனையாகும் இதழாசிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு "லக்ஷ்மி'யின் நாவல்களையும் சிறுகதைகளையும் வெளியிட்டனர்.
திருச்சி மாவட்டம் "தொட்டியம்' என்ற சிற்றூரில், "லக்ஷ்மி' என்னும் புனைபெயர் கொண்ட திரிபுரசுந்தரி, 1921-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி சீனிவாசன்-பட்டம்மாள் தம்பதிக்குப் பிறந்தார்.

தொட்டியத்தில் தொடக்கக் கல்வி, முசிறியில் மேல்நிலைக் கல்வி முடித்து, திருச்சி கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவு திரிபுரசுந்தரிக்கு இருந்தது. டாக்டர் படிப்புக்காகச் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அப்போதுதான் எழுத்தாளரானார்.

டாக்டர் திரிபுரசுந்தரி எழுத்தாளர் "லக்ஷ்மி' ஆவதற்கு அவருடைய தந்தையின் கடிதமொன்றும் காரணம். மருத்துவம் படித்து முடித்துப் பட்டம் பெறுவதற்குள் இவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகள், துன்ப-துயரங்கள் ஏராளம். தந்தை சீனிவாசனின் கடிதம் தமிழ்நாட்டுக்குச் சிறந்த ஓர் எழுத்தாளரை அளித்தது. ""இனி செலவுகளைச் சமாளித்து உன்னைப் படிக்க வைக்க முடியாது; அதற்குத் தேவையான பொருளாதாரம் என்னிடம் தற்சமயமில்லை. வீட்டையும் பொறுப்பாக நிர்வகிக்க வேண்டும் என்பதால் முப்பது ரூபாய்க்கு மேல் அனுப்ப முடியாது. எனவே, உடனே நீ புறப்பட்டு வந்து விடு. என்னால் சமாளிக்க முடியும் என்ற நிலை வரும்போது உன்னைத் தொடர்ந்து படிக்க வைக்கிறேன். அதுவரை படிப்பை நிறுத்தி வைக்கவும்'' என்று தந்தை எழுதிய கடிதம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது.

திரிபுரசுந்தரி திகைத்தார். மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது அவ்வளவு எளிதன்று. நிறுத்திவிட்டால் மீண்டும் இடம் கிடைக்குமா? கிடைத்தாலும், அப்பாவுக்குப் படிப்பைத் தொடர அனுப்பும் எண்ணம் அப்போது இருக்குமா? என்று பலவிதச் சிந்தனைகளும், குழப்பங்களும் சூழ்ந்தபோது, பழைய அமெரிக்கச் செய்தித்தாள் ஒன்று அவர் கண்ணில் பட்டது.

அதில், அமெரிக்க மருத்துவக் கல்லூரி மாணவரைப் பற்றிய மிகவும் சுவையான கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. தன் படிப்பை மேற்கொண்டு தொடர, பொருளாதார வசதி இல்லாமல் அந்த மாணவர் சிரமப்பட்டார். அதற்காக அவர் தளர்ந்துவிடவில்லை. மனம் துவண்டுவிடவில்லை. ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக்கிப் பணம் தேட முற்பட்டார். காய்கறிகளை ஏற்றிச் செல்லும் லாரியை ஓட்டினார். அதில் கிடைத்த வருமானத்தில் படிப்பதற்குத் தேவையான நூல்களை வாங்கினார்; படிப்பைத் தொடர்ந்தார்; பட்டம் பெற்றார். பின்னர் அறுவை சிகிச்சையில் நிபுணரானார். இதைப் படித்த திரிபுரசுந்தரியின் உள்ளத்தில் சக்தி ஒன்று பிறந்தது.

"நாமும் ஓய்வுநேர வேலையாக ஏதாவதொன்றை ஏன் தேடிக்கொள்ளக்கூடாது' என்னும் கேள்வி எழுந்தது. நாள்தோறும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இருந்து பிராட்வே வழியாகப் (டிராம் வண்டியில்) பயணிக்கும்போது ஒவ்வொரு நாளும் டிராம் வண்டி நிற்குமிடத்தில் "ஆனந்த விகடன்' அலுவலகப் பெயர்ப் பலகையை திரிபுரசுந்தரி காண்பது வழக்கம். திரிபுரசுந்தரி வாராவாரம் விரும்பிப் படிக்கும் இதழ் அது. அந்த இதழின் நிர்வாக ஆசிரியர் எஸ்.எஸ்.வாசனைச் சந்தித்து, "தன் மருத்துவ மேல் படிப்புக்கு உதவி கேட்டால் என்ன?' என்ற எண்ணம் தோன்றியது.

கதைகளை வெளியிட்டுத் தன் மருத்துவப் படிப்புக்கு உதவ வேண்டும் என்று கேட்க, அவரைச் சந்திக்க விரும்பினார். திரிபுரசுந்தரியின் அதிர்ஷ்டம், எந்தவித இடையூறுமின்றி வாசனைச் சந்திக்க முடிந்தது. தன் நிலையை உருக்கமாக அவரிடம் கூறினார். மறுநாளே கதை எழுதிக்கொண்டு வருமாறு வாசன் சொன்னார்.

இரவு முழுவதும் கண் விழித்து "தகுந்த தண்டனையா? என்ற தலைப்பில் சிறுகதை ஒன்றை எழுதினார். வாசனிடம் அளித்தார். "லக்ஷ்மி' என்ற புனைபெயரிட்டுக் கொண்டார். பொறுப்பாசிரியராக இருந்த கல்கியைச் சந்தித்துத் தன் முதல் கதையை அவரிடம் கொடுத்தார்.

""உங்கள் கதையைப் படித்தேன்; மிகவும் நன்றாக இருக்கிறது. அடுத்த வாரம் ஆனந்த விகடனில் வெளியிடப்படும்'' என்று கல்கி தம் கைப்படவே கடிதம் எழுதியிருந்தார்.

கதை பிரசுரமானது. ஏழு ரூபாய் சன்மானம் கிடைத்தது. அந்தப் பணத்தில் கதை எழுதுவதற்குத் தேவையான காகிதமும், பேனாவும் வாங்கினார். அந்தப் பேனாவைப் பெரும் பொக்கிஷமாகக் கருதிப் பல ஆண்டுகள் வைத்திருந்தார்.
அடுத்து ஓர் இன்ப அதிர்ச்சி. மாணவியான லக்ஷ்மிக்கு உதவ, தொடர்ந்து இரண்டு, மூன்று கதைகளை வெளியிட முடிவெடுத்து, கதை ஒன்றுக்குப் பத்து ரூபாய் அளிக்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்கி சொன்னார். அதைக் கேட்டு, லக்ஷ்மி தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளியிட வார்த்தைகளின்றித் தவித்தார். லக்ஷ்மி என்னும் புனைபெயருடன் சிறுகதை எழுத்தாளராகத் தன் எழுத்துப் பயணத்தைத் தொடங்கினார். அடுத்தும் ஓர் இன்ப அதிர்ச்சி. "பவானி' என்னும் சிறு தொடர் எழுதுமாறு ஆனந்த விகடனில் வாய்ப்புக்கிடைத்தது. அதற்கு ஐநூறு ரூபாய் அன்பளிப்புத் தருவதாக வாசன் கூறினார்.


பவானியைத் தொடர்ந்து பல சமூக நாவல்களைத் தொடராக எழுதினார். அரக்கு மாளிகை, காஞ்சனையின் கனவு, போன்ற கதைகளின் கரு, லட்சியம், சமூகச் சூழலின் பிரதிபலிப்பு வாசகர்களைக் கவர்ந்தன.

அவருடைய வரலாற்றை ஒரு வார இதழ், "கதாசிரியையின் கதை' என்னும் தொடராக வெளியிட்டது. லக்ஷ்மியாய் வாசகர்களிடையே அறிமுகமாகி பெயரும், புகழும் பெற்ற டாக்டர் திரிபுரசுந்தரியின் வாழ்க்கையில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. டாக்டர் படிப்பை முடிப்பதற்குள் பண நெருக்கடிகளை வென்றார்.

ஜாதி மதங்களைப் பாராத வாழ்க்கை நெறியைப் பற்றி சிறுகதைகளிலும், நாவல்களிலும் எழுதிவந்த அவர், காதல் என்ற புனிதச் சொல்லுக்குக் களங்கம் ஏற்படாது காத்து வந்தார். காதலை ஒரு காவியமாக நினைத்தார்.

டாக்டர் திரிபுரசுந்தரி "தாய்மை' என்ற நூலை எழுதினார். அந்த நூலுக்குச் சிறந்த மருத்துவ நூலுக்கான விருது கிடைத்தது. அந்தப் பரிசைப் பெற இலங்கையில் நடந்த தமிழ் மாநாட்டுக்குச் சென்றபோது, தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த "கண்ணபிரான்' என்ற இளைஞரைச் சந்தித்தார். இருவரும் காதல் வயப்பட்டனர். பதிவுத் திருமணமும் (கலப்புத் திருமணம்) செய்துகொண்டனர். இவர்களின் ஒரே ஆண் வாரிசு மகேஸ்வரன்.



 லக்ஷ்மியின் "ஒரு காவிரியைப் போல' என்னும் நாவலை "சாகித்ய அகாதெமி' விருதுக்குப் பரிந்துரைத்துப் பரிசு கிடைக்குமாறு செய்தவர் நா.பார்த்தசாரதி.
பவானியில் தொடங்கி ஏறத்தாழ 150 புதினங்களும், எட்டுச் சிறுகதைத் தொகுதிகளும் எழுதியுள்ளார். "கதாசிரியையின் கதை' என்னும் தலைப்பில் தன் வரலாறு உள்பட ஐந்து கட்டுரைத் தொடர்களும், "தாய்மை' உள்பட ஆறு மருத்துவ நூல்களும் எழுதியுள்ளார்.

1987-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி லக்ஷ்மி, தமிழர்களையும் நண்பர்களையும் எழுத்தையும் விட்டுப் பிரிந்தார்.

மருத்துவராக வேண்டும் என்று இளம் வயதிலேயே லட்சியம் கொண்டு அதை நிறைவேற்றிய இவர், எழுத்தையும் மருத்துவராகக் கருதினார். அதனால்தானோ என்னவோ, இவரைப் பற்றிய ஆய்வு நூல் எழுதிய பேராசிரியை கலா தாக்கர் "எழுத்தும் ஒரு வகை மருத்துவமே' என்று பொருத்தமாகத் தலைப்பிட்டுப் பயனுள்ள நூலொன்றை 1998-ஆம் ஆண்டு படைத்துள்ளார். 

[ நன்றி : தினமணி ] 

சில மேலதிகத் தகவல்கள்:

1) எழுத்தாளர் லக்ஷ்மியின் முதல் சிறுகதையான 'தகுந்த தண்டனையா?',  10-3-1940 தேதியிட்ட விகடன் இதழில் வெளியாகியது . அந்த வருஷம் மொத்தம் 13 கதைகளை அவர் எழுதினார் ! 








முதல் கதையின் முதல் பத்தி:

ல்யாணியின் வருகைக்காக ராமகிருஷ்ணன் எவ்வளவு நேரந் தான் காத்திருப்பான்? காலேஜ் லைப்ரரியின் வாசலில் நகத்தைக் கடித்த வண்ணம் சுவரில் சாய்ந்து கொண்டு, சுமார் ஒரு மணி நேரமாக அதே தியானமாக நின்று கொண்டிருந்தான். சென்ற மூன்று நாட்களாக அவளிடம் 'அந்த'ச் சங்கதியைச் சொல்லவேண்டும் என்று அவன் எவ்வளவோ முயன்று பார்த்தான். ஆனால், அவளைப் பார்த்தவுடன் அவனுடைய மனம் மாறிவிடும். இப்படி எத்தனை நாள்தான் காலந்தள்ளுவான்? எப்படியாவது ஒரு நாள் ஏதாவது ஒரு முடிவுக்கு வரவேண்டாமா? இதையெல்லாம் யோசிக்க யோசிக்க அவன் தலை கிறு கிறுத்தது.





2) அவருடைய முதல் தொடர்கதை: “ பவானி “ . 1944-இல் வந்தது.  

( 40-இல் கல்கி விகடனை விட்டு விலகிவிட்டார்;  பொறுப்பாசிரியர் தேவன் லக்ஷ்மிக்குத் தொடர்ந்து ஊக்கம் கொடுத்தார்.) 



3) அடுத்த தொடர்கதை “ பெண்மனம்”. 1946-இல் விகடனில் வந்தது. ஓவியம்: கோபுலு. பின்னர் சிவாஜி கணேசன், சரோஜா தேவி நடித்த “இருவர் உள்ளம்” என்ற திரைப்படமாய் வந்தது. வசனம்: கலைஞர் கருணாநிதி.



                                              

[ நன்றி : விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

விக்கிரமன் 

எழுத்தாளர் லக்ஷ்மி: கடுகு -அகஸ்தியன்  

லக்ஷ்மி

கருத்துகள் இல்லை: