வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

உ.வே.சா. - 4

தில்லையில் ஐயரவர்கள்
ச.தண்டபாணி தேசிகர் 




” .... உடனே “பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக” என்று அச்சத்துடன் அரைவார்த்தையாகச் சொல்லி நிறுத்தினேன். . . .  “ நீ எப்போது சிலப்பதிகாரம் படித்தாய்? “ என்றார்கள். 

                                                 ----- ச.தண்டபாணி தேசிகர் ------------


பிப்ரவரி 19. தமிழ்த் தாத்தாவின் பிறந்த தினம்.

அவர் நினைவில், கலைமகளில் 1955-இல் வந்த ஒரு கட்டுரை இதோ!
( தட்டச்சிட்ட வடிவில் கட்டுரையின் கீழே)

இது மகாவித்வான் தண்டபாணி தேசிகர் எழுதிய கட்டுரை.  இவர்  நன்னூல் விருத்தியுரை, திருவாசகப் பேரொளி,  மாணிக்கவாசகரின் திருக்கோவையார் மூலமும் உரையும். திருக்குறள் உரைக்களஞ்சியம். திருக்குறள் அழகும் அமைப்பும். கணபதி, முருகன், ஆடவல்லான், சக்தி, சைவத்தின் மறுமலர்ச்சி, முதல் திருமுறை, முதற்கடவுள் வினாயகர், முழுமுதற் கடவுள் நடராஜர்  என்று அறுபதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.





[ நன்றி : கலைமகள் ]

பி.கு. 1

மேற்கண்ட கட்டுரையைத் தட்டச்சு செய்த வெண்பா விரும்பிக்கு நன்றி:
=======

ஐயரவர்கள் சென்னை அரசாங்கக் கல்லூரியினின்று ஓய்வு பெற்ற பின், ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியாரின் விருப்பத்திற்கிணங்கச்செட்டியாரவர்கள் சிதம்பரத்தில் புதிதாக ஸ்தாபித்த "மீனாட்சி தமிழ்க் கல்லூரி"யின் தலைவராகச் சில காலம் பணி புரிந்தனர் (இப்பணியைத் தொடங்கும் போது ஐயரவர்களுக்குப் பிராயம் சுமார் 70).  அந்தக் கல்லூரியில் முதன்முதலில் படித்தவருள் பின்வரும் கட்டுரையை எழுதிய ஸ்ரீ ச. தண்டபாணி தேசிகரும் ஒருவர்.  இவர் பிற்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தில் "மகாவித்துவான்" பட்டம் பெற்றனர்.
*****************
*****************

தில்லையில் ஐயரவர்கள்

--- ச. தண்டபாணி தேசிகர்

சங்கீத வித்துவானுக்குச் சாரீரம் வாய்ப்பது அதிருஷ்டம்.  வாணிகனுக்குச் சரக்குக் கிடைப்பது அதிருஷ்டம்.  முதலாளிக்கு நம்பிக்கையான பணியாள் கிடைப்பது அதிருஷ்டம்.  ஆடவனுக்கு நல்ல மனைவி கிடைப்பது அதிருஷ்டம்.  மாணவர்க்கு நல்ல ஆசிரியர் கிடைப்பது அதிருஷ்டம்.  அதுபோல எங்கள் அறிவியல் வாழ்விலும் 1924 - ஆம் ஆண்டு அதிருஷ்டத் தெய்வம் குடியேறத் தொடங்கியது.

யார் மூலமாகஅப்போது கூடிய மாணவர்களாகிய நாங்கள் ஏதோ ஓரளவு சம வித்துவான் தேர்ந்தவர்களும், நல்ல அறிஞர்களிடம் முறையாகப் பாடங் கேட்டவர்களுமாகத்தான் இருந்தோம்.  ஆனாலும் அறிவில் விளக்கம், தெளிவு, எழுத்து வன்மை, கட்டுரைத் தெளிவு இல்லை.  எல்லாம் கலக்கம்.  அந்த நிலையில் தெளிவும் விளக்கமுமாக அதிருஷ்டத் தெய்வம் எங்களை அணுகிற்று.  அங்ஙனம் அணுகச் செய்தவர் பெருங்கொடை வள்ளலாகிய ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள்.  செட்டியார் அவர்கள் முதல் முதல் நாதப் பிறப்பிடமாகிய சிதம்பரத்தில் ஞானக் கோயில் கட்டத் தொடங்கினார்கள்.  அதில் மூன்று சத்திகளை நிலைபெறுவித்தார்கள்.  ஒரு சத்தி தமிழ் ஞானத்தாய்; மற்றொரு சத்தி வடமொழி கலாரூபிணி; மற்றொரு சத்தி ஆங்கில லட்சுமி.  இம்மூவரை முறையே பூசித்து விளக்கம் செய்து பயில்வார்க்குப் பயன்பெறுவிக்க மூன்று குருமார்களை நிறுவித் தந்தார்கள்.  அவர்களுள் தமிழ் ஞானத் தாயின் அர்ச்சகராக, பயில்பவருக்கு ஆசிரியராக அமர்த்தப்பெற்றவர்கள் மகாமகோபாத்தியாய ஐயரவர்கள்.  எங்கள் அதிருஷ்டத் தெய்வந்தான் ஐயரவர்கள்.

ஐயரவர்கள் குருமூர்த்தியைவிடக் கொஞ்சம் மிஞ்சியவர்கள்.  ஆதிகுருநாதராகிய தட்சிணாமூர்த்திக்கு அப்போது இவ்வளவு பெரிய உலகத்தில் நாலு மாணவ்ர்கள்தாம் கிடைத்தார்கள்.  ஐயா அவர்களுக்கு நாங்கள் ஆறு மாணவர்கள் கிடைத்தோம்.  வித்துவான் வகுப்பு 1924, ஜூலை மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது.  இடையில் ஒருவர் எங்கள் அறிவுப் பயணத்தில் புத்தகச் சுமையைச் சுமந்து வரமாட்டாமையால், மூன்று மாதத் தேர்வுச் சாவடியிலேயே நின்று விட்டார்.  அப்படிக் கழிந்தும் கடைசிவரையில் ஐந்து பேரை மாணவராகக் கொண்டு ஐயா அவர்கள் குருமூர்த்தியாக விளங்கினார்கள்.  அப்போது புகுமுக வகுப்பும் தொடங்கியது.  வகுப்பு இரண்டு.  ஆசிரியர் ஐயா அவர்கள் மட்டுந்தான்.  இன்னொருவரைச் சேர்க்க வேண்டும் என்பது நிர்வாகிகள் எல்லாருடைய எண்ணமுமாயிற்று.  இச்செய்தி காற்று வாக்கிற் பரவியது.
ஐயரவர்களுக்கோ, தம்மோடு ஒத்துத் தமிழ்க் கோயிலில் பணிபுரியத் தக்கவர் திருவாவடுதுறை ஆதீனத்துப் புத்தகசாலையில் (சரஸ்வதி மஹாலில்) பணி செய்யும் பொன்னோதுவா மூர்த்திகளே என்ற எண்ணம் இருந்தது.  தாட்சிண்ணியத்திற்காகவாவது, பிற காரணங்களுக்காகவாவது தமிழ்ப் பணியில் கண்டவர்களை ஈடுபடுத்துவது, ஐயா அவர்களுக்குப் பிடிக்காது.  பொன்னோதுவா மூர்த்திகள் வரச் சில மாதங்கள் தாமதமாயின.  இந்த அவகாசத்தைப் பயன்படுத்திக்கொள்ளப் பலர் முயன்றனர்.  அவர்களில் ஒருவர் திருவையாற்று அரசர் கல்லூரியில் சம வித்துவான் மூன்றாம் வகுப்பில் தேர்ந்தவர்.  அவர் ஊரையோ பெயரையோ இப்போது நினைவு கூரவேண்டிய அவசியம் இல்லை.  கல்லூரியில் தேர்ந்தவுடனே இக்கல்லூரியை நாடி வந்தார்.

ஒரு நாள் காலை ஒன்பது மணி இருக்கும்.  ஐயா அவர்களை வீட்டிற் சென்று பார்த்துவிட்டுக் கல்லூரிக்கும் வந்தார்.  பத்து மணிக்குக் கல்லூரி தொடங்கியது.  முதல் மணி அருணைக் கலம்பக வகுப்பு.  அவரும் வந்து ஒரு பக்கம் உட்கார்ந்தார்.  ஐயா அவர்கள் எங்களுக்கு அவரை அறிமுகப் படுத்தி வைத்தார்கள்.  எங்களையும் அவருக்கு அறிமுகப் படுத்தி வைக்கத் தொடங்கி ஒவ்வொருவராக, "இவர் சென்ற ஆண்டே திருவையாற்றில் சம வித்துவான் தேர்ந்தவர்.  இவர் சுன்னாகம் குமாரசாமிப் புலவர் மாணாக்கர்.  இவர் சங்கரபண்டிதர் மாணவர்.  இவர் நெடுநாட்களாக என்னிடமே இருப்பவர்.  இவர் நாவலர் கலாசாலையில் படித்துப் புகுமுகம் தேர்ந்தவர்" என்று தெரிவித்து, "இவர்கள் எல்லாரும் இங்கே மாணவர்கள்" என்று சொல்லி நிறுத்தினார்கள்.  பின்பு பாடம் தொடங்கியது.  அன்றைப் பாடம், "இந்திர கோபமாம் இதழி பாகனார், செந்தமிழ் அருணைநந் தேரும் செல்லுமே" என்ற பகுதி.  இதற்கு ஐயா அவர்கள் வழக்கம் போல விளக்கந் தந்துவிட்டுப் பதவுரை கூறத்
 தொடங்கினார்கள். இதிற் பங்குபற்ற விரும்பி, வந்தவர், "இதழி கொன்றைதானே"என்றார்.

ஐயரவர்களின் முகத்தில் புன்சிரிப்புத் தவழ்ந்தது.  எங்களுக்குக் கடுங்கோபம்.  இந்த நிலையில் ஐயா அவர்கள் அவரைப் பார்த்து, "தாங்கள் சொல்வது சரிதான்.  அது அகராதிப் பொருள்.  அகராதியிலுள்ள இதழி இயற்கைப் பொருள்.  இது கவிஞன் படைத்துக்கொண்ட சொல்.  இதெல்லாம் அகராதியில் எங்கே இருக்கப்போகிறது?" என்று சொல்லிவிட்டுப் பாடத்தை நடத்தினார்கள்.  இதற்கிடையில் ஒரு சிறு குழப்பம் உண்டாயிற்று.  ஐயரவர்கள் இருந்து பாடஞ் சொன்ன இடத்திற்குப் பின்புறம் ஓர் அறை.  அதிலிருந்து ஒரு கீரிப் பிள்ளை எங்கள் மேல் விழுந்தடித்துக்கொண்டு ஓடிற்று.

நாங்கள் பயந்துகொண்டு எழுந்து அசைந்து கொடுத்தோம்.  வகுப்புத் தடைப்பட்டது.  ஐயா அவர்கள் ஓடுகின்ற கீரியைப் பார்த்து, "என்னஇங்குமா வந்துவிட்டாய்ஒன்றுபட்டவர்களைப் பிரித்து வைப்பதுதான் உன் வழக்கமாயிற்றே!" என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள்.

ஐயரவர்களுடைய வேடிக்கைப் பேச்சுக்களிலுங்கூட ஒரு மகா கவியின் சிந்தனைச் சிற்பம் நிழற் படமாக நிலவிக்கொண்டிருக்கும்.  இலக்கியங்களில் கூர்ந்த மதியுடன்  நினைவு வன்மையுடன் பழகியவர்களுக்கே அந்த நிழற்படம் நன்கு விளங்கும்.  அதனை அந்த ஆறு மாதங்களுக்குள் பல முறை அனுபவித்தவர்கள் நாங்கள்.  ஆதலால் இந்த வேடிக்கைப் பேச்சும் ஒரு விஷயத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமே என்று எண்ணி நாங்கள் அறிந்த அளவு இலக்கியக் கருவூலத்தில் புகுந்து தேடிக் கொண்டிருந்தோம்.  கீரியால் கலவரப்பட்டிருந்த எங்கள் கருத்தை மீட்டும் அறிவுலகில் திருப்ப ஐயரவர்கள் கையாளும் முறை இப்படித்தான் இருக்கும்.  சிந்தித்தோம்.  வந்தவரைப் பார்த்து, "தங்களுக்கு ஞாபகம் இருக்கலாமே!" என்றார்கள்.

அவரும் எங்களைப் போலத்தான் வானை நோக்கிக்கொண்டிருந்தார்.  மீட்டும் எங்களைப் பார்த்து, "என்ன, புலப்படவில்லையாஉலகில் எதனைப் பார்த்தாலும் அதனை அறிவுலகில் ஒப்புத் தேடும் உணர்ச்சியும் பெருகவேண்டும்.  அப்போதுதான் இலக்கியம் எப்பொழுதும் நமக்குச் சொந்தமாக இருக்கும்" என்று உபதேசவுரை வழங்கினார்கள்.

இந்த உபதேசம் எங்களுக்குச் சுருக்கென்று தைத்தது.  உணர்ச்சி பிறந்தது.  நினைவு வந்தது.  உடனே அடியேன், "பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக" என்று அச்சத்தால் அரை வார்த்தையாகச் சொல்லி நிறுத்தினேன்.

ஐயா அவர்கள், "எங்கே, முழுவதும் சொல்.  இடத்தையும் சொல், பார்க்கலாம்" என்றார்கள்.  ஆணையின்படி நடந்தேன்.  "நீ எப்போது சிலப்பதிகாரம் படித்தாய்?" என்றார்கள்.  அவர்கள் குறிப்பைத் தெரிந்துகொண்ட அடியேன், "சென்ற ஆண்டு திருவையாற்றில் சம வித்துவான் முடிவு நிலை (Final) க்காகப் படித்தேன்" என்று தெரிவித்துக்கொண்டேன்.

"அப்படியாசந்தோஷம்.  மாணவர்களாக இருந்தால் ஞாபகம் வைத்திருக்க வேண்டியது அவசியந்தான்" என்றார்கள்.  இந்தத் தொடரின் ஆழத்தை அனுபவித்துக்கொண்டே இருந்தோம்.  வந்தவர் மாலை வீட்டில் வந்து ஐயாவைப் பார்ப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.  சென்றவர் வரவே இல்லை.
மற்றொரு நாள்.  இதனோடு ஒத்த கல்வி நிலையத்தின் ஆண்டு விழா நடந்தது.  அதற்கு மாணவர்களுடன் வரவேண்டும் என்று ஐயா அவர்களை அழைத்திருந்தார்கள்.  அப்படியே ஐயாவுடன் சென்றோம்.  அங்கே விழா மிருச்சகடிகம் என்ற நாடகத்துடன் முடிவதாக இருந்தது.  அந்த நிலையம் மிக நெருக்கடியான சிறிய இடம்.  நாடகப் பிரியர்களின் கூட்டத்தால் உள்ளே நுழையவே முடியவில்லை.  ஐயாவை மட்டும் கஷ்டப்பட்டு அழைத்துப் போய்விட்டார்கள்.  எங்களைக் கவனிப்பார் இல்லை.  அந்நிலையில் எதிர் வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தோம்.

எங்காவது கூட்டங்களுக்குப் போனால் ஐயா அவர்கள் மாணவர்களை விட்டுப் போவது வழக்கம் இல்லை.  மாணவர்களுக்குச் சிறு அவமரியாதை நிகழுமாயினும் அதனைக் குறிப்பாக எடுத்துக் காட்டி விட்டு வந்துவிடுவது வழக்கம்.  அதுபோலவே அன்று கால் மணி நேரமாயிற்று.  நாங்கள் வெளியில் காத்துக்கொண்டிருந்தோம்.  உள்ளே எங்களில் யாராவது காணப்படுகிறோமா என்று கவனித்தார்கள்.  இல்லை யாகவே புறப்பட்டு வெளியில் வந்து விட்டார்கள்.  எங்களையும் அழைத்துக் கொண்டு கல்லூரிக்கே வந்துவிட்டார்கள்.  பாடமும் நடந்துகொண்டிருந்தது.

அப்போதுதான் துணை நிலையத்தில் இருந்த தலைமையாசிரியர் அவர்கள், "எங்கே, ஐயரவர்கள் வெளியிற் சென்றவர்கள் வரவே இல்லையே" என்பதைக் கவனித்தார்.  போய்விட்டார்கள் என்பதை அறிந்ததும் உடனாசிரியரை அனுப்பி அழைத்துவரச் சொன்னார்.

ஐயா அவர்கள் அவரிடம், "மக்களாலேயே தலைவன் மன்னனாகிறான்.  மாணாக்கர்களாலேயே நாம் ஆசிரியர்களாகிறோம்.  அங்கே தமிழுக்கு நெருக்கடியாக இருக்கிறது.  பிறகு பார்த்துக் கொள்ளுவோம்" என்று பிடிவாதமாகச் சொல்லிப் போகச் சொல்லிவிட்டார்.

எங்கள் மனநிலையை அப்போது பார்க்க வேண்டுமே!  உடம்பெல்லாம் புல்லரித்தது ஒன்று தான் எங்கள் நிலையை உணர்த்தியது எனலாம்.  'நம் மாணாக்கர்களைக் கவனியாத இடத்திலே நமக்கும் ஈடுபாடு வேண்டாம்' என்ற உறுதி எல்லாருக்கும் உண்டாகுமா?
இப்படிப்பட்ட உலகியல் நடைமுறை எத்தனையோ அவர்களிடம் நாங்கள் கற்றுக் கொண்டதுண்டு.  மறுப்புக்கள் எழுதுவதில் எனக்கு ஓர் அலாதிப் பிரியம் இருந்தது.  அது இளமையின் நிலைமை.  அது வளர்ச்சியைக் கெடுக்கும் என்று எடுத்துக் காட்டிச் சத்தியமும் வாங்கிக்கொண்டு அவர்கள் என்னை வழிப்படுத்திய கதை மிகப் பெரியது.  அவ்வண்ணமே அவர்கள், "சொல்வளம் சுருக்கு, கைவளம் பெருக்கு" என்ற மந்திர உபதேசம் மறக்க முடியாத நிகழ்ச்சி.

தில்லையில் அவர்கள் மூன்று ஆண்டுகள் இருந்து விலகுகின்ற காலத்து எழுபது மாணவர்கள் சேர்ந்துவிட்டனர்.  கல்லூரி மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது.  அந்தக் கல்லூரியே இன்று கீழ்த் திசைப் பகுதியாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் சிறந்த உறுப்பாகத் திகழ்கிறது.  எல்லாம் அவர்கள் கை விசேடம்.
 =============== 
தொடர்புள்ள பதிவுகள்:

உ.வே.சா

3 கருத்துகள்:

இன்னம்பூரான் சொன்னது…

தனி ஒருவரின் தமிழ்த்தொண்டு மகத்தானது என்றால், அது உங்களுடையது, ஐயா.

Angarai Vadyar சொன்னது…

Many thanks for bringing this article to our attention. Your contribution is invaluable.
A. Sundararajan (Angarai Vadyar)

Pas S. Pasupathy சொன்னது…

நண்பர் ‘அரசி’ யின் பின்னூட்டம்:

பண்டை ஐயாவை எம் முன் கொணர்வீர்
விண்டு வைப்பீர் பலர் எழுத்தெமக்கே
கண்டது, காணாததெத்த‌னை தருவீர்!
கண்டங்கள் தாண்டியும், தமிழ்த் தொண்டரே!