திங்கள், 20 ஆகஸ்ட், 2012

ரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்

நன்றி கூறும் நினைவு நாள்
ரா.கி. ரங்கராஜன்



ரா.கி. ரங்கராஜன்  பல ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.
இவற்றுள் சில: ஹென்றி ஷாரியரின் பாப்பிலான் ( Papillon) (பட்டாம்பூச்சி), சிட்னி ஷெல்டனின் இஃப் டுமாரோ கம்ஸ் ( If Tomorrow Comes) (தாரகை), தி ஸ்டார்ஸ் ஷைன் டவுன் ( The Stars Shine Down) (லாரா) மற்றும் ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸ் ( Rage of Angels) (ஜெனிஃபர்).



கீழுள்ள கட்டுரையில் அவர் மொழிபெயர்ப்புகளைப்  பற்றிப் பேசியிருக்கிறார்.


புகழ் பெற்ற ஆங்கில தினசரியின் அலுவலகத்திலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு ஃபோன் செய்தார்கள். பேசியவர் அதன் ஆசிரியர் குழுவை சேர்ந்த ஒரு பெண்மணி. பேட்டிகளையும் விமரிசனக் கட்டுரைகளையும் சுவைபட எழுதியிருக்கிறார்.

'உங்களை பேட்டி கண்டு எழுத நினைக்கிறேன். எப்போது வந்தால் செளகரியப்படும்?’ என்று கேட்டார் அந்தப் பெண்மணி.

ரொம்ப சந்தோஷம். எப்போது வேண்டுமானாலும் வரலாம். வருவதற்கு முன்னால் ஃபோன் செய்யுங்கள். என் உடல்நிலை ஒரு நாள் மாதிரி இன்னொரு நாள் இருப்பதில்லை என்று சொல்லிவிட்டு என் கதைகளைப் படித்திருக்கிறீர்களா?” என்று விசாரித்தேன்.

'நிறைய. சிறு வயது முதல் எனக்கு உங்கள் கதைகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஃபோன் செய்து விட்டு வருகிறேன்ன்றார்.

இவர் கூப்பிட்டதைப் பற்றிப் பெருமையாக ஒரு நண்பரிடம் சொன்னேன். 

கேட்கவே சந்தோஷமாயிருக்கிறது ஸார் என்றவர் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். வருத்தப்படமாட்டீர்களே என்றார்.

கொஞ்சம் திக்கென்றிருந்தாலும் மாட்டேன், மாட்டேன். சொல்லுங்கள் என்றேன்.

"நாற்பது ஜப்பது வயதுக்கு உட்பட்டவர்களிடம் உங்கள் பெயரை சொன்னால் ஒ! அவரா லிட்னி ஷெல்ட்டன், ஜெஃப்ரே ஆர்ச்சர் நாவல்களைப் பிரமாதமாய் மொழி பெயர்த்திருக்கிறாரே! நான் படித்திருக்கிறேன் என்கிறார்கள். நீங்கள் சுயமாக, சொந்தத்தில் எவ்வளவு நல்ல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியிருக்கிறீர்கள்! அவற்றை சொல்லாமல் மொழிபெயர்த்த நாவல்களை மட்டும் குறிப்பிடுகிறார்களே என்று எனக்கு வருத்தம் ஏற்படுவதுண்டு என்றார் நண்பர்.

எனக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அதற்காக யாரையும் குற்றம் சொல்ல முடியாது. சுயமாக, சொந்தமாக ஏராளமாய் எழுதித் தள்ளியிருக்கிறேன். அவைகளில் சிறந்தவையும் உண்டு. ரொம்ப சாதாரணமானவைகளும் ஏராளம். ஆனால் அதெல்லாம் அறுபது எழுபதுகளில், பட்டாம்பூச்சி, ஜெனிஃபர், லாரா முதலிய மொழிபெயர்ப்பு நாவல்கள் எனக்கு நற்பெயர் வாங்கிக் கொடுத்ததற்குக் காரணம் அவை ஆற்றல்மிக்க எழுத் தாளர்களால் படைக்கப்பட்டவை என்பதுதான். பன்னீரைப் பிறர் மீது தெளிக்கும் போது தெளித்தவர் மீதும் சில துளிகள் விழும் என்ற நியதிப்படி எனக்கும் சிறிது பெயர் கிடைத்தது.
இருந்தாலும் நண்பர் சொன்னது போல நான் ஆரம்ப காலத்தில் எழுதியவை ரொம்பப் பேருக்குத் தெரியவில்லையே என்ற வருத்தம் உண்டாயிற்று.



அப்போது உலகப் பிரசித்தி பெற்ற தத்துவஞானி பாலோ கொயலோ எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தேன். ஆறுதல் ஏற்பட்டது.
ஆர்மீனியாவில் ஒஷான் என்ற ஊரில் அவருக்கு நிகழ்ந்த ஒர் அனுபவத்தை சொல்கிறது அந்தக் கட்டுரை (Like the Flowing River என்ற அவருடைய கட்டுரைத் தொகுப்பில் இருக்கிறது.) அதில்

எந்த ஊருக்கு சென்றாலும் மியூசியங்களையும் கட்டிடங்களை யும் பார்ப்பது எனக்குப் பிடிக்காது. அதைக் காட்டிலும் அங்குள்ள மக்களோடு பேசிப் பழகுவதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். அதன்படி ஆர்மீனிய நாட்டின் ஒரு நகரத்திற்கு சென் றிருந்த போது மார்க்கெட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்னேன். என்னை அந்த ஊருக்கு அழைத்திருந்தவர்கள் 'இன்று மார்க்கெட்டோ கடைகளோ கிடையாது. எல்லாவற்றுக்கும் தேசிய விடுமுறை. காரணம் இன்று ஒரு புனிதருடைய நினைவு தினம். அதை எல்லாரும் கொண்டாடுகிறோம் என்று கூறி ஒரு சர்ச்சுக்கு அழைத்துப் போனார்கள். துரத்தில் பணி மூடிய மலைச் சிகரங்கள் அழகுறக் காட்சி தந்தன.

சர்ச்சில் கூடியிருந்தவர்கள் அனைவரும் ஏதோ திருமண வைபவத்திற்கு வந்தவர்களைப் போல ஜம்மென்ற புத்தாடைகளுடன் கலகலப்பான சூழலில் இருந்தார்கள். சாதாரண ஜீன்ஸ் சட்டையுடன் நிற்க எனக்கே வெட்கமாக இருந்தது. எனக்குப் பூங்கொத்தைக் கொடுத்து வரவேற்று முன்னே அழைத்துச் சென்றார்கள். புனிதர் என்று சொல்லப்பட்டவரின் சமாதி வரை சென்றேன். அங்கிருந்த சமாதியில் பூங்கொத்தை வைத்து வணக்கம் செய்யும்படி சொன்னார்கள். அவர்களுடைய விருப்பப்படியே நடந்து கொண்டேன்.

யாருடைய நினைவு தினம் என்று பிற்பாடு விசாரித்த போது புனித மொழி பெயர்ப்பாளர் (Holy Translator) என்று தெரிவித்தார்கள்
எனக்கு ஆச்சரியாமாயிருந்தது. மொழிபெயர்ப்பாளர்களில் புனிதமானவர் என்றும் உண்டா என்ன? பிறகு தெரிந்து கொண்டேன். அவருடைய பெயர் ஸெயின்ட் மெஸ்ரோப். அன்றுவரை ஆர்மீனிய பாஷை பேசப்பட்டதேயொழிய அதற்கென்று எழுத்து வடிவம் (லிபி) இருக்கவில்லை. லெயின்ட் மெஸ்ரோப் அதற்கு எழுத்து வடிவத்தை ஏற்படுத்தியதோடு பைபிள் உள்பட எல்லா இலக்கியங்களையும் ஆர்மீனிய பாஷையில் மொழி பெயர்த்தார். கிரேக்க மொழியிலும் பாரசீக மொழியிலும் இருந்த மாபெரும் இலக்கியங்களை அந்த பாஷையில் மொழிபெயர்த்து மக்களிடையே பரப்பினார். அதன் பிறகு ஆர்மீனியா நாடு தன் பரம்பரைக் கலாசாரத்தின் பெருமையை உணர்ந்து இன்று வரை சீரும் சிறப்புமாகக் காப்பாற்றி வருகிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் ஒன்பதாம் தேதியை அவருடைய நினைவு நாளாக ஆர்மீனியாவில் கொண்டாடி வருகிறார்கள்.

அன்று செயின்ட் மெஸ்ரோபின் சமாதியின் முன்னே நின்ற போது என் கண்களில் நீர் துளித்தது. நான் எழுதியவற்றைத் தங்கள் மொழிகளில் மொழி பெயர்த்து உலகுக்கு அறிமுகப் படுத்தியவர்களையும் மற்ற மொழிகளில் வெளியானவற்றை எனக்குத் தெரிந்த மொழியில் மொழி பெயர்த்துக் கொடுத்து நான் படிக்கும்படி செய்து என்னை உருவாக்கியவர்களையும் நினைத்து நன்றி கூர்கிறேன். அவர்கள் வெறும் மொழி பெயர்ப்பாளர்கள் அல்ல. மனித சிந்தனைகளை இணைத்துப் பாலம் கட்டியவர்கள்.
( ஆகவே மொழி பெயர்ப்பாளார்களுக்கு ஜே!)

[நன்றி : அண்ணாநகர் டைம்ஸ்]

என் பின் குறிப்பு :

ஷெர்லக் ஹோம்ஸ், ஆர்சின் லூபின் போன்றவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த ஆரணி குப்புசாமி முதலியாருக்கு ஜே! 


அண்ணாநகர் டைம்ஸில் ரா.கி எழுதிய ‘நாலுமூலை’ப் பத்திகளின் ஒரு தொகுப்பைக் கிழக்கு பதிப்பகம் ஒரு நூலாக வெளியிட்டுள்ளது.


தொடர்புள்ள பதிவுகள் :
ரா.கி.ரங்கராஜன்: சில கட்டுரைகள்

’ஹிந்து’க் கட்டுரை - 2

'கல்கி' இதழின் அஞ்சலிக் கட்டுரைகள்

’லைட்ஸ் ஆஃப்’ : சுஜாதா தேசிகன் 

கருத்துகள் இல்லை: