செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

990. சுத்தானந்த பாரதி - 8

சிவாஜியின் வீரவடிவம்
சுத்தானந்த பாரதி பிப்ரவரி 19, 1627. சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள்.

‘சிவாஜி’ இதழில் 1945-இல் வந்த ஒரு கவிதை. தொடர்புள்ள பதிவுகள்:

சுத்தானந்த பாரதியார்

திங்கள், 19 பிப்ரவரி, 2018

989. எஸ்.வி.சகஸ்ர நாமம் -2

எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
ராஜலட்சுமி சிவலிங்கம்


பிப்ரவரி 19. சகஸ்ரநாமம் அவர்களின் நினைவு தினம்.
====
பிரபல நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ர நாமம் (S.V.Sahasranamam)  பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கோவையை அடுத்த சிங்காநல்லூரில் பிறந்தவர் (1913). சிறுவயதிலேயே தாயை இழந்தார். 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். 13 வயதில், உள்ளூர் பாய்ஸ் கம்பெனி நாடகம் ஒன்றைப் பார்த்ததும் நடிப்பில் ஆர்வம் பிறந்தது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறினார்.

* அப்பா எழுதியதைப்போல கடிதம் எழுதி அவருடைய கையெழுத்தையும் தானே போட்டு தயாரித்த சம்மதக் கடிதத்தை டி.கே.எஸ்.சகோதரர்களின் மதுரை பாலசண்முகானந்த சபா மேலாளரிடம் கொடுத்து, நாடகக் கம்பெனியில் சேர்ந்து கொண்டார். நடிப்பு மட்டுமின்றி, பல தொழில்நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்தார்.

* நாடகம் தவிர பளு தூக்கும் போட்டிகளிலும் பங்கேற்றார். வாலிபால், பேட்மின்டன் ஆட்டத்திலும் கைதேர்ந்தவர். கார் மெக்கானிக் வேலையும் தெரியும். சிலகாலம் பஸ் கண்டக்டராகவும் பணியாற்றினார். பல நாடகக் குழுக்களிலும் நடித்து புகழ்பெற்றார்.

* 1935-ல் முதன்முதலாக ‘மேனகா’ திரைப்படத்தில் நடித்தார். ஆழமான உணர்ச்சிகளை அனாயாசமாக வெளிப்படுத்தியும், யதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தார். வித்தியாசமான வில்லன் பாத்திரத்திலும் வெளுத்து வாங்கினார். வெள்ளையர் ஆட்சியின்போது சுதந்திரப் போராட்டத் தாகத்தைப் பிரதிபலிக்கும் நாடகங்களில் துணிச்சலுடன் முக்கிய வேடங்களில் நடித்தார்.

* இவரே நாடகங்களை எழுதி, தயாரித்து, நடித்தும் வந்தார். வ.ரா., ப.ஜீவானந்தம் உள்ளிட்டோர் இவரது நாடகங்களை விரும்பிப் பார்த்தனர். நாடகங்கள் வாயிலான இவரது சமூக மறுமலச்சிப் பங்களிப்பைப் பாராட்டி, ‘பாரதி கலைஞர் சகஸ்ரநாமம்’ என்ற பட்டத்தை ப.ஜீவானந்தம் இவருக்கு வழங்கினார். ‘மேனகா’, ‘பராசக்தி’, ‘ஆனந்தஜோதி’, ‘நல்லதம்பி’, ‘மர்மயோகி’, ‘உரிமைக் குரல்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘நவாப் நாற்காலி’ உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

* என்.எஸ்.கிருஷ்ணன் சிறை சென்றிருந்தபோது அவருடைய நாடகக் கம்பெனியின் நிர்வாகியாகவும் முக்கிய நடிகராகவும் செயல்பட்டுள்ளார். 1950களில் நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்தபோதும், ‘சகஸ்ரநாமம் சேவா ஸ்டேஜ்’ என்ற நாடகக் குழுவைத் தொடர்ந்து நடத்தி வந்தார். நாடகத் துறையை தன் உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்டார்.

* பல பிரபலங்கள், இலக்கியவாதிகளின் தொடர்பால் வாசிப்பு ஆர்வமும் கொண்டிருந்தார். திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பாரதியார் கவிதைகள், கட்டுரைகளை வாசித்தார்.

* நாடகங்களில் பின்னணி பாடும் உத்தியை அறிமுகப்படுத்தியது இவர்தான். இதன் மூலம் பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே நாடகத்தில் நடிக்க முடியும் என்ற நிலையை மாற்றினார். ஆர்.முத்துராமன், என்.எஸ்.லட்சுமி, வி.சகுந்தலா, காந்திமதி, வி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் இவரது கம்பெனியில் நடித்து புகழ் பெற்றனர்.

* மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். இறுதிவரை கதராடையே அணிந்தவர். நாடகக் கலையில் இவரது சிறப்பான பங்களிப்புக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது. பாரதியின் கவிதைகளை மிகச் சிறப்பாக நாடகமாக அரங்கேற்றியவர்.

* சீனப் போர் சமயத்தில் தேசிய எல்லைப் பாதுகாப்பு நிதி திரட்ட பல நாடகங்கள் நடத்தினார். சினிமாவிலும் நாடகங்களிலும் தனக்கு அளிக்கப்பட்ட தங்கம், வெள்ளிப் பதக்கங்கள், கோப்பைகள், சங்கிலிகள் அனைத்தையும் யுத்த நிதிக்காக காமராஜரிடம் வழங்கினார். குணச்சித்திர நடிப்பில் தன்னிகரற்ற கலைஞராகப் போற்றப்பட்ட எஸ்.வி.சகஸ்ரநாமம் 75-வது வயதில் 1988-ல் மறைந்தார்.

[ நன்றி: http://tamil.thehindu.com/ ]

தொடர்புள்ள பதிவுகள்:
எஸ்.வி.சகஸ்ரநாமம்

நட்சத்திரங்கள்

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

988. சங்கு சுப்பிரமணியம் - 1

"காலணா இதழ்" - சங்கு சுப்பிரமணியம்
சு.இரமேஷ்


[ நன்றி: தளவாய் சுந்தரம் ] 


பிப்ரவரி 15. ‘சங்கு’ சுப்பிரமணியத்தின் நினைவு தினம்.
===

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் காந்தியத்தையும், தேசியத்தையும் தமிழ்நாட்டு மக்களிடையே பரப்பி, விடுதலை வேட்கையைத் தூண்டிய இதழ்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று "சுதந்திர சங்கு". தொடங்கப்பட்டபோது வாரம் இருமுறையாக வந்த சுதந்திர சங்கு, மக்களிடம் கிடைத்த பரவலான ஆதரவைக்கொண்டு வாரம் மூன்று முறையாக வலம் வந்தது. ஒரு இதழின் விலை, காலணா. அதனால் இவ்விதழை "காலணா இதழ்" என்று அழைத்தனர். "சுதந்திர சங்கு" என்ற காலணா இதழைத் தொடங்கி மக்களிடம் சுதந்திர தாகத்தைத் தூண்டியவர் சுப்பிரமணியம். இப்பத்திரிகையை நடத்தியதால் இவர் சங்கு சுப்பிரமணியம் என்றே அழைக்கப்பட்டார்.

[ நன்றி:  thamizham.net ] 


1905ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், தேரழுந்தூரில் பிறந்தார். தமிழ், ஆங்கிலம், இந்தி, வடமொழி எனப் பன்மொழி புலமை மிக்கவராக விளங்கினார். பக்தியும், தேசியமும் இவருக்கு இரு கண்களாக இருந்தன.

1930ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி சுதந்திர சங்கு ஆரம்பிக்கப்பட்டது. எட்டு பக்கங்களைக் கொண்டு, பாரதியாரின் "எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே", என்ற இரண்டு வரிகளையும் இணைத்து உருவாக்கப்பட்டதுதான் சுதந்திர சங்கு. "சங்கு கொண்டே வெற்றியூதுவோமே, இதைத் தரணிக்கெல்லா மெடுத்தோதுவோமே", என்பதுதான் சுதந்திர சங்கின் பெயருக்குக் கீழ் அமைந்த வாசகங்கள்.

அக்காலகட்டத்தில் வேறெந்த இதழும் செய்யாத அளவுக்கு தேசிய உணர்ச்சியை இவ்விதழ் தூண்டியது. அக்காலத்தில் சுதந்திர சங்கின் தலையங்கங்களைப் படிப்பதற்கென தனி வாசகர் வட்டமே இருந்தது. ஆங்கிலேயருக்கெதிரான எழுத்தாயுதமாக, நாட்டுப்பற்றையும் விடுதலை உணர்வையும் மக்களுக்கு எழுத்து வாயிலாக ஊட்டியது. மிகச்சிறந்த தேசபக்தரான சங்கு சுப்பிரமணியம், பாரதியார், வ.வே.சு.ஐயர் ஆகியோரைத் தமது இலட்சிய குருவாகக் கொண்டவர். அவர்களின் தாக்கம் இவரின் எழுத்திலும் வெளிப்பட்டது. தமிழ்ப் பத்திரிகையுலகில் ஒரு இலட்சம் பிரதிகள்வரை சுதந்திர சங்கு விற்பனையாகி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணமாக இருந்த சங்கு சுப்பிரமணியத்தின் எழுத்தாற்றலும் இவருடைய கட்டுரைகளுக்குத் தேர்ந்தெடுக்கும் தலைப்புகளும் சுதந்திர சங்குக்கு ஒரு வசீகரத்தை ஏற்படுத்தின.

சுதந்திர சங்கில் 3.6.1933இல் "அஞ்ஞாதவாசம்" எனும் தலைப்பில் ஒரு தலையங்கம் வெளியானது. "அஞ்ஞாதவாசம்" என்றால் தலைமறைவு வாழ்க்கை என்று பொருள். இத்துடன் இதழ் நிறுத்தப்பட்டது. மீண்டும் சிறிது காலத்துக்குப் பிறகு சுதந்திர சங்கு வார இதழாக வெளிவந்தது. 24 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழின் விலை ஓரணா. மணிக்கொடியின் தாக்கத்தால் இம்முறை இதழின் உள்ளடக்கத்தில் நிறைய மாறுதல்களைச் செய்திருந்தார் சங்கு சுப்பிரமணியன். சிறுகதை, கவிதை, இலக்கியக் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். ஆனாலும் 28 இதழ்களுக்குப் பின்பு 1934இல் மீண்டும் நாட்டு விடுதலைக்குச் சுதந்திர சங்கு பாடுபடும் என்ற அறிவிப்போடு இதழ் நிறுத்தப்பட்டது.

[ நன்றி: thamizham.net ]

இரண்டாவது காலகட்டத்தில் வெளிவந்த சுதந்திர சங்கு இதழில் 65 கதைகள், 150 கட்டுரைகள், 25 கவிதைகள் வெளியாகியுள்ளன. மணிக்கொடி இதழுக்கு இணையாக சுதந்திர சங்கும் சிறுகதை வளர்ச்சிக்கு உதவியது. மணிக்கொடியில் கதை எழுதுவதற்கு முன்பே கு.ப.ரா. சுதந்திர சங்கில் எழுதினார். இவரின் மிகச்சிறந்த கதைகளுள் ஒன்றான "நூர் உன்னிசு" சுதந்திர சங்கில்தான் வெளிவந்தது.

சங்கு சுப்பிரமணியம்தான் சி.சு.செல்லப்பாவை சிறுகதை ஆசிரியராக்கினார். " அன்றைய இளம் படைப்பாளியான நான் அனுப்பிய முதல் சிறுகதையைப் படித்துவிட்டு சங்கு சுப்பிரமணியம் எழுதிய தபால் கார்டு வரிகள் இதோ:-

இளம் தோழ,

தங்கள் கதை கிடைத்தது.

புதிய கை என்று தெரிகிறது. எழுதி எழுதிக் கிழித்து எறியுங்கள். தங்கள் கதையைத் திருத்தி வெளியிடுகிறேன் என்று எழுதியிருந்தார் சங்கு சுப்பிரமணியம்.

அடுத்த என் கதையை அவர் ஒரு எழுத்துகூடத் திருத்தாமல் வெளியிட்டார். நான் சிறுகதாசிரியன் ஆனேன். இப்படி இன்னும் வேறு யாராருக்கு அவர் செய்திருக்கிறாரோ, எனக்குத் தெரியாது. என் அஞ்சலி அவருக்கு என்றைக்கும் (இலக்கியச் சுவை) " என்று சங்கு சுப்பிரமணியம் குறித்த தன் மனப்பதிவை சி.சு.செல்லப்பா வெளிப்படுத்துகிறார்.

வ.ரா., பாரதிதாசன், சுத்தானந்த பாரதி, நாமக்கல் கவிஞர் முதலியோர் சுதந்திர சங்கில் தொடர்ந்து எழுதியிருக்கின்றனர். சங்கு சுப்பிரமணியம் பத்திரிகையாசிரியர் மட்டுமன்றி சிறந்த சிறுகதை ஆசிரியரும்கூட. மணிக்கொடி, கலைமகள் போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். மணிக்கொடி கதைப் பதிப்பின் முதல் இதழில் "வேதாளம் சொன்ன கதை" என்ற புராணக் கதையம்சம் கொண்ட சிறுகதையை எழுதினார். அவருடைய "சிரஞ்சீவிக்கதை" என்ற சிறுகதை மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சங்கு சுப்பிரமணியம் தன்னை சிறந்த பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்திக் கொண்டாரே தவிர, சிறுகதையாசிரியராக அல்ல.

சுதேசமித்திரன், மணிக்கொடி, ஹனுமான், தினமணி முதலிய இதழ்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். பாரதியின் கவிதைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தீராத ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். காந்தியின் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றினார். தீண்டாமையை ஒழிக்க தம்முடைய எழுத்தைப் பயன்படுத்திக்கொண்டார். தீண்டாமை ஒழிப்பில் தீவிரம் காட்டிய சரஸ்வதி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். காந்தியடிகளின் ஆரோக்கிய வழி, இல்லற மகாரகசியம், ஹரிஜன சேவை ஆகிய மூன்று நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதற்காகவும், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காவும் பல முறை சிறையும் சென்றுள்ளார்.

கதர்த் துணிகளைத் தலையில் சுமந்தபடி, மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடியபடி ஊர்ஊராக நடந்து சென்று தேசிய சிந்தனையையும், சுதந்திர உணர்வையும் வளர்த்தவர் சங்கு சுப்பிரமணியம்.

ஜெமினி ஸ்டுடியோவில் சிலகாலம் பணி புரிந்துள்ளார். 1948ஆம் ஆண்டு கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த "சக்ரதாரி" என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதியிருக்கிறார். சந்திரலேகா, இராஜி என் கண்மணி போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார். ஒரு சில திரைப்பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

"தினமணி"யில் பாகவதக் கதைகள் எழுதினார். இந்தக் காலகட்டத்தில் ஜயதேவரின் "கீதகோவிந்தம்" நூலை தமிழில் மொழிபெயர்த்தார். இன்றும் இம் மொழிபெயர்ப்பு கையெழுத்துப் பிரதியாகவே வலம் வருகிறது. இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்த இவர், 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி மண்ணுலக வாழ்வை நீத்தார்.

சுதந்திர சங்கு என்ற இதழின் மூலமாக விடுதலை வேட்கையை விதைத்து, பல எழுத்தாளர்களை உருவாக்கி, காந்தியத்தையும் பக்தியையும் தம் எழுத்துகள் வழியாக மக்களிடம் கொண்டு சென்ற சங்கு சுப்பிரமணியத்தின் பங்களிப்பையும், தியாகத்தையும் அடுத்த தலைமுறை முழுமையாகத் தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லாமல் இருப்பது வேதனை. ஆனால், தமிழ்ப் பத்திரிகை உலகில் சங்கு சுப்பிரமணியத்தின் பங்களிப்பை ஒருநாளும் மறக்கவோ, மறைக்கவோ முடியாது!


[ நன்றி:- தினமணி ]

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

987. செய்குத்தம்பி பாவலர் - 2

செய்குத்தம்பி பாவலர்


பிப்ரவரி 13. பாவலரின் நினைவு தினம்.

தினமணியில் வந்த ஒரு கட்டுரை இதோ.
=====

"ஓரும் அவதானம் ஒருநூறும் செய்திந்தப் 
 பாரில் புகழ்படைத்த பண்டிதன் - சீரிய 
 செந்தமிழ்ச் செல்வன் செய்குத் தம்பிப் பாவல!" 

எனக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாவலரின் பைந்தமிழ்த் திறன் பற்றிப் பாடினார். 

*"வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் யானொருவன் அன்றோ!"* என்ற  இராமலிங்க அடிகளாரின் வாக்கிற்கு இணங்க குடும்பம், உறவு, சாதி, சமயம் கடந்த ஞானியர் பரம்பரையில் தோன்றிய பாவலர், நாஞ்சில் நாட்டின் இடலாக்குடி என்னும் ஊரில் பக்கீர்மீறான் ஆமீனா தம்பதியர்க்கு மூன்றாம் மகனாக 1874, ஜூலை 31-ல் 
பிறந்தார். 


"தொட்டனைத்தூறும் மணற்கேணி," என்பதற்கொப்ப அவரின் உள்ளத்தில் தமிழுணர்வு ஊற்றெடுத்தது. சங்கரநாராயண அண்ணாவியார் என்பவரிடம் முறையாகத் தமிழ் பயின்ற பாவலர், இலக்கண-இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார். அந்நாளில் இராமலிங்க அடிகளாரின் அருட்பாவை ஒரு பிரிவினர் மருட்பா எனக் கூறிவந்தனர். இதனை அறிந்த 
பாவலர் அருட்பா சார்பில் வாதிடுவதற்கு முன் வந்தார். அதற்கான கூட்டம் சென்னையில் ஏற்பாடாயிற்று. அக்கூட்டத்தில் தொடக்கமாக, 

"சாதிகுலம் சமயமெல்லாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித் தனித்ததிரு வமுதளித்த தணித் தலைமைப் பொருளே, 
 ஆதிநடு கடைகாட்டா அகண்ட பகிரண்ட ஆருயிர்கள் அகம்புறம் மற்றனைத்து நின்ற மொழியே, 
 ஓதியுணர்ந்தவரெல்லாம் எனைக் கேட்க எனைத்தான் ஓதாமலுணர்ந் துணர்வாம் உருவுறச் செய்யுறவே, 
 ஜோதிமயமாய் விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும் 
 தூயநடத் தரசேயென் சொல்லு மணிந்தருளே!" 


இப்பாடலை முழங்கினார். கேட்ட அவையோர் இவருடைய சமய நல்லிணக்கப் பாங்கை உணர்ந்து கையொலி எழுப்பி மகிழ்ந்தனர். தொடர்ந்து பல அரங்குகளில் தமது வாதத் திறமையால் *"அருட்பா அருட்பாவே"* என்று நிறுவினார். 

மரபுப் பாவளம் மிக்க பாவலர் சிலேடை பாடுவதில் சிறப்பாகத் திகழ்ந்தார். 
தமிழறிஞர் ஒருவர் ஒருமுறை, அவரைச் சிலேடையாகக் கடவுள் வணக்கம் பாடும்படி  வேண்டினார். அப்பொழுது, 

"சிரமாறுடையான் செழுமா வடியைத், 
 திரமா நினைவார் சிரமே பணிவார், 
 பரமா தரவா பருகாருருகார், 
 வரமா தவமே மலிவார் பொலிவார்." 


என்னும் பாடலைப்பாடி, 


   - சிரம் ஆறுடையான் - சிரத்தில் கங்கையாற்றை உடைய சிவபெருமான், 
   - சிரம்மாறு உடையான் - இயல்புக்கு மாறுபட்ட சிரத்தை உடைய கணபதி, 
   - சிரம் ஆறுடையான் - ஆறுதலைகளை உடைய முருகன், 
   - சிரம் "ஆறு" உடையான் - திருவரங்கத்தில் தலைப்பாகம் காவிரியாறு ஓட  பள்ளிகொண்ட திருமால், 
   - சிரம் ஆறு உடையான் - தலையாய நல்வழிகளை உலகிற்குக் காட்டும் அல்லாஹ் 


என ஐம்பொருளைச் சிலேடையால் விளக்கினார். இக்கவிச் சுவையில் *"ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ,"*என்ற *திருவாசகத் தேனையும்*,* "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்"* என்ற *திருமந்திரச் சத்தையும்* பருகத் தந்த பாவலரின் நுட்பம் பாராட்டத்தக்கதன்றோ! 

அவருடைய நினைவாற்றல் நினைந்து நினைந்து போற்றத்தக்கது. ஒருமுறை மதுரைச் தமிழ்ச் சங்க நிறுவனர் பாண்டித்துரை தேவர், தமிழ் விருந்துண்டு மகிழ கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். 


   - சைவ நூல் ஆய்வாளர் சுப்பிரமணிய ஐயர்,    - இலக்கணப் பேராசிரியர் நாராயண ஐயங்கார்,    - கந்தசாமிக் கவிராயர் ஆகியோர் தமிழமுது பரிமாறிக் கொண்டிருந்தனர். அங்குப் பாவலரும் வருகை தந்து அமர்ந்தார். 


பாவலரின் நினைவுக் கலையின் பரிசோதனைக் களமாக அந்த அவை மாறியது. ஆய்வாளர் சுப்பிரமணிய ஐயர் ஏதேனும் புராண நூலில் ஏழுமுறை "நோக்க" என்ற சொல் வந்துள்ள பாடல் ஒன்றைக் கூறுங்கள் எனக் கேட்க, பாவலர், 

"கரத்தை நோக்குவர், வாளினை நோக்குவர், 
 கடுப்பின் கருத்தை நோக்குவர், வீரத்தை நோக்குவர், 
 எதிராத் தரத்தை நோக்குவர், அவையினில் அபுஜகில் - உடனே 
 உரைத்த வார்த்தையை நோக்குவர், நோக்குவர் உள்ளத்தை." 


என்ற சீறாப்புராணப் பாடலைப் பாடிக்காட்டினார். 


தமிழ் கூறும் நல்லுலகுக்கு அவர் தந்த இலக்கியச் செல்வங்கள் மரபுப் பாவளம் மலிந்தவை. *"முன்னோர் மொழி பொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம்,"* என்பதற்கு எடுத்துக்காட்டானவை. 


   - நபிகள்நாயக மான்மிய மஞ்சரி,    - கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை,    - திருக்கோட்டாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி,    - திருநாகூர் திரிபந்தாதி,    - நீதிவெண்பா,    - சம்சுதாசீன் கோவை, மற்றும் 
   - தனிப்பாடல் திரட்டு  
முதலியவை அவர் தந்த நூல்களுள் குறிப்பிடத்தக்கவை. 
பாவலர் சொல்லிலும் செயலிலும் நீதிவழுவா விழுமிய நோக்கம் கொண்டவர். அறிஞர் அவையிலும், மாணவர் மத்தியிலும் நீதிகளை உணர்த்தி வந்தார். அந்த நீதிகளே அவரிடம் வெண்பாக்களாக மலர்ந்தன. 


   - அறியாமையை அகற்றுவது கல்வி;    - அறிவை நன்நெறிக்குத் திருத்துவது கல்வி;    - இறையருளைப் பெருக்கி ஆன்மிக இன்பத்தை அளிப்பது கல்வி, 
அதனை, 
"அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி 
 மருளை யகற்றி மதிக்கும் தெருளை 
 அகற்றுவதும் ஆவிக்கருந்துணை யாயின்பம், 
 பொருத்துவதும் கல்வியென்றே போற்று."என்பதும், 

திருவள்ளுவர் கூறிய 
   - கூடாஒழுக்கம்,    - கூடாநட்பு,    - சிற்றினம் சேராமை 
என்ற சீரிய நன்நெறியை, 

"கூடாரைக் கூடற்க, கூடிற் குறித்தவலாம், 
 நாடாதெரிந் தேனும் நட்பொழிக -ஆடுமயில் 
 பச்சோந்தி பாற்படா பட்டால் மணிவிழிகள் 
 அச்சோ அழிந்தொழியு மால்." 

என்பதும் அவர் நீதிவெண்பாவில் குறிப்பிடத்தக்கன. அவர் எழுதிய "சீட்டுக் கவிகள்" இலக்கியத்தரம் வாய்ந்தவை. பாவலர் சென்னையில் தங்கி இருந்தபொழுது, கோட்டாற்றிலிருந்து தம் நண்பர் பாக்கியம் பண்டாரம் என்பவருக்கு விடுத்த சீட்டுக் கவியில், 
"ஆகஞ் சுகமா? அடுத்தவர்கள் சேமமா? 
 மேகம் வழங்கியதா? மேலுமிந்தப்-போகம் 
 விளையுமா? இன்னுமழை வேண்டுமா? செல்வம் 
விளையுமா? ஊர்செழிக்கு மா?" 

என்று பாவலர் தமது பொதுநல விழைவை வெளிப்படுத்தியுள்ளார். 

மாணவர்கள் தம்போல் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் ஆர்வமுள்ள பாவலர், தம் முன்னாள் மாணவர் ஒருவருக்கு எழுதிய சீட்டுக்கவி இது: 

"கற்றுவரும் பெரும்தொழிலைக் கனவிடையும் 
 மறவாமல் கருத்தும் கொண்டு 
 முற்றுறவே ஆய்ந்துணர்ந்து முடித்த வந்நூல் 
 ஏது, இனிநீ முடிக்கப் போகும் 
 கொற்றமுறு நூலேது? மேல்விளங்கு 
 நூலென்ன? குணம தாக 
 வெற்றிதரும் இலக்கணங்கள் ஏதேனும் 
 பயின்றனையோ விள்ளு வாயே!" 


இது அனைவரிடமும் படிப்பார்வத்தைத் தூண்டத்தக்கதாகும். பாட்டுகள். 
பலவற்றுள் முத்திரை பதித்த பாவலர் உரைநடைகள் பலவும் தந்துள்ளார். 


   - நபிகள் நாயக ஜீவிய சரித்திரம்,    - சீறா நாடகம், 
   - தேவலோகத்துக் கிரிமினல் கேசு,    - வேதாந்த விகார கிரிமினல் கேசு என்பன இவருடைய உரைநடை நூல்களாகும். 

தமிழ்த் தாயின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவராகிய செய்குத்தம்பிப் பாவலர் 1950 பிப்ரவரி 13ல் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். இவர் மறைவுச் செய்தி அறிந்து பண்டிதமணி கதிரேசச் செட்டியார் "நாஞ்சில் நாட்டின் பெரும்புலவரும், தமிழன்னையின் திருப்புதல்வரும் மறைந்தது கேட்டு துயருறுகிறேன்," என்றார். இரசிகமணி டி.கே.சி. "பாவலருக்கு இருந்த நுண்ணிய அறிவும், அபூர்வப் புலமையும் இந்தத் தலைமுறையில் யாருக்கும் இருந்ததில்லை," என்றார். 


[ நன்றி: தமிழ்மணி (தினமணி) ]

தொடர்புள்ள பதிவுகள்:

திங்கள், 12 பிப்ரவரி, 2018

986. கிருத்திகா -1

கீர்த்தி மிகுந்த கிருத்திகா
திருப்பூர் கிருஷ்ணன்


பிப்ரவரி 13. எழுத்தாளர் கிருத்திகா ( மதுரம் பூதலிங்கம் ) வின் நினைவு தினம்.
====
அழகிய நடையில் ஆங்கிலத்திலும்,தமிழிலும் இலக்கிய ஓவியங்களைத் தீட்டிய எழுத்தாளர் கிருத்திகா. உண்மையிலேயே ஓவியங்களைத் தீட்டவும் வல்லவர் என்பது பலரும் அறியாத தகவல். கிருத்திகா வரைந்த வண்ணச் சித்திரங்கள் கண்ணைக் கவர்பவை. அவரது மெல்லிய உணர்வுகளைப் போலவே அவர் வரைந்த சித்திரங்களும் கூட மென்மையும்,மேன்மையும் நிறைந்தவை. கிருத்திகாவின் "யோகா ஆஃப் லிவிங்" என்ற நூலில், உள்ளே ஆங்கிலத்தில் ஓடுவது அவரது எண்ணம்; வெளியே அட்டையை அலங்கரிப்பது அவரது வண்ணம்.


விமர்சகர் சிட்டி பி.ஜி.சுந்தரராஜன் சொன்ன வண்ணம், நிறைய எழுதலானார் கிருத்திகா. சிட்டி தான் அவரது இலக்கியம் வளர ஊக்கம் கொடுத்தவர். சிட்டிக்கும்,கிருத்திகாவுக்கும் இருந்த உறவை அண்ணன் - தங்கை உறவு என்பதா அல்லது குரு - சிஷ்யை உறவு என்பதா?இரண்டுவிதமாகச் சொன்னாலும் அது உண்மைதான். தன் பெயர்த்திக்குத் தான் வளர்த்த தன் அபிமான எழுத்தாளரான கிருத்திகாவின் பெயரை வைத்து மகிழ்ந்தார் அமரர் சிட்டி. தி. ஜானகிராமன் மதித்த எழுத்தாளர்களில் ஒருவர் கிருத்திகா.


சிட்டி, சிவபாதசுந்தரம், க.நா.சு., ஆதவன் போன்ற மிகச் சிலர்தான் தமிழில்
எழுதுவதோடு கூட ஆங்கிலத்திலும் எழுதியவர்கள். அவர்கள் வரிசையில் வரும் இருமொழி எழுத்தாளர் இவர்.

தில்லியிலும்,பல்வேறு நகரங்களிலும் வசித்த கிருத்திகா சிட்டிக்கு எழுதிய
கடிதங்களும்,சிட்டி அவருக்கு எழுதிய பதில் கடிதங்களும் தனித்தனிக்
காகிதங்களில் எழுதப்பட்டவை அல்ல. எண்பது பக்கம், நூறு பக்கம் கொண்ட நோட்டுப் புத்தகங்களில் ஒவ்வொரு நோட்டுப் புத்தகமும் ஒரு கடிதம் என்ற வகையில் எழுதப்பட்டவை. தற்காலத் தமிழிலக்கிய வரலாற்றையே பேசுபவை.

கிருத்திகாவின் செல்ல மகளும்,வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் மனைவியுமான மீனா, "அந்த மிக நீண்ட கடிதப் புத்தகங்களை எல்லாம் அவற்றைப் பாதுகாக்கும் ஏதாவது ஒரு நூலகத்திற்குக் கொடுக்க வேண்டும் என்றிருக்கிறேன்," என்கிறார் மிகுந்த அக்கறையுடன். மீனாவின் முகத்தில் தன் தாயாரைப் பற்றிய பெருமிதத்தைப் பார்ப்பதே ஒரு பரவசம்.

அமரர் கிருத்திகாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ஸ்ரீவித்யா (மணிக்கொடி எழுத்தாளர்-சிட்டியின் புதல்வி), "என்னிடம்,கிருத்திகா சிட்டிக்கு எழுதிய ஏராளமான கடிதப் புத்தகங்களின் கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. அவற்றை நான் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன்!" என்கிறார் பெருமையுடன். ஸ்ரீவித்யா என்ற பெயரை அவருக்குச் சூட்டியவரே கிருத்திகா தானாம். கி. இராஜநாராயணன்,
வல்லிக்கண்ணன், வண்ணதாசன் போன்றோர் கடிதங்கள் நூலாக்கம் பெற்றுள்ளன. இன்னும் சிட்டி - கிருத்திகா கடிதங்கள் எதுவும் நூலாக்கம் பெறவில்லை!

சிட்டியின் அணுக்கத் தொண்டராகவே காலம் கழித்த சிட்டியின் புதல்வரான மொழிபெயர்ப்பாளர் விஸ்வேஸ்வரன், சிட்டி தான் இல்லை என்றால் இனி கிருத்திகாவும் இல்லையே என்று உருகுகிறார். ஒருகாலத்தில் தில்லிவாழ் எழுத்தாளர்கள் மத்தியில் கிருத்திகா ஒரு முக்கியப் புள்ளி.

பாரதியைப் படித்த பரவசத்தில் எழுதத் தொடங்கியவர் கிருத்திகா. "புகை
நடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்டோமே" என்ற பாரதி வரிகளின் முதல் இரு வார்த்தைகளைத்தான், தமது தொடக்க கால நாவலுக்குத் தலைப்பாக்கினார்."சத்யமேவ, பொன்கூண்டு, வாஸவேஸ்வரம், தர்ம ஷேத்ரே, புதிய கோணங்கி, நேற்றிருந்தோம்" போன்ற நாவல்கள், "யோகமும் போகமும்," "தீராத பிரச்னை," போன்ற குறுநாவல்கள், "மனதிலே ஒரு மறு, மா ஜானகி" போன்ற நாடகங்கள் இவையெல்லாம் கிருத்திகா தமிழுக்குக் கொடுத்த கொடை.

ஆங்கிலத்தில் எழுதும்போது "மதுரம் பூதலிங்கம்" என்ற தம் இயற்பெயரில்
எழுதினார். "குழந்தைகளுக்கான இராமாயணம், மகாபாரதம், பாகவதம்" என இவரது ஆங்கில நூல்கள் பல. பாரதியின் வாழ்க்கை வரலாற்றை, பாரதி வாழ்ந்தஇடங்களுக்கெல்லாம் நேரில் சென்று ஆராய்ந்து ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதற்கு உதவி செய்தவர் தினமணி கதிர் முன்னாள் ஆசிரியர் ஆர்.ஏ. பத்மநாபன். பிரபல எழுத்தாளர் சிவசங்கரி, அமரர் கிருத்திகாவின் உறவினர். "எனக்குக் கிருத்திகா தான் ஆதர்சம்" என்று சிவசங்கரி சொல்வதுண்டு.

இந்தியா முழுவதும் பயணம் செய்தவர் கிருத்திகா. இந்தியக் கோயில்கள்,
கலைகள் போன்றவை குறித்துக் கலைமகளில் முன்னர் பற்பல கட்டுரைகள் எழுதி வந்தார். ஆங்கிலத்தில் மிக அழகாக மேடையில் பேசக்கூடியவர்; அது பேச்சல்ல, சங்கீதம். சம்ஸ்கிருதத்திலும் பெரும்புலமை படைத்தவர்.

கணவர் காலஞ்சென்ற பூதலிங்கம் அரசாங்கத்தில் மிகப் பெரும் பதவிகள்
வகித்தவர். (பழைய ஐ.சி.எஸ்; உருக்குத் துறையிலும், நிதித்துறையிலும்
செயலாளராகப் பணியாற்றியவர். பிலாய் உருக்காலை நிர்மாணத்தில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு).

ஆழ்ந்த இலக்கியவாதிகளோடு ஆத்மார்த்தமாக உரையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் கிருத்திகா. அவரது கணவர் பூதலிங்கம் போலவே இவரும் சடங்குகளில் நம்பிக்கை அற்றவர். மதங்கடந்த ஆன்மிகத்தைப் போற்றியவர். "செய்வன திருந்தச் செய்" என்பதில் மிகுந்த நாட்டமுள்ளவர். சின்னச் சின்னச் செயல்களிலும் கூட முழு அக்கறை செலுத்தி அவர் செய்வதைப் பார்த்தால், நடைமுறை வாழ்வையே அவர் ஒரு யோகமாகப் பயின்றார் என்பது புரியும்.

கலை, இலக்கியம் ஆகிய சிந்தனைகளில் தோய்ந்தவராய், சென்னை நகரில் 93 வயதுவரை வாழ்ந்தார் கிருத்திகா. அதாவது நேற்றுவரை. பழுத்த பழம் தானாய்க் காம்பிலிருந்து உதிர்வதுபோல, நல்லவர்கள் உயிர் முதுமைக் காலத்தில் இயல்பாய் உதிரும் என்று சொல்லியிருக்கிறார் மூதறிஞர் இராஜாஜி. இதோ பழுத்த பழம் ஒன்று வாசகர்கள் மனத்தில் கமகமக்கும் இனிய நினைவுகளைப் பரப்பிவிட்டுத் தானாய் உதிர்ந்துவிட்டது.

(13-2-2009 அன்று கிருத்திகா காலமானார்)

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:

கிருத்திகா; விக்கிப்பீடியா

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

985. பாடலும் படமும் - 27

ஆனந்தக் கூத்து 

பிப்ரவரி 10. எஸ்.ராஜம் அவர்களின் பிறந்த நாள்.
சிவராத்திரியும் நெருங்குகிறது  !

இதோ அப்பரின் தேவாரமும் , ராஜம் அவர்களின் ஆனந்தக் கூத்தனும்!


[ ஓவியம்: எஸ்.ராஜம் ] 

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே

                                                           -திருநாவுக்கரசர்

இன்னொரு ஓவியம்:

[ ஓவியம்: எஸ்.ராஜம் ]


பொழிப்புரை:
வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும்.


தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

[ நன்றி: @FrescoRajam  ] 

வியாழன், 8 பிப்ரவரி, 2018

984. மு. மு. இஸ்மாயில் -1

கம்பனில் தோய்ந்த நீதிபதி மு.மு.இஸ்மாயில்!


 பிப்ரவரி 8. நீதியரசர் மு.மு.இஸ்மாயிலின் பிறந்த தினம்.

அவருடைய சில நூல்களைப் படித்திருக்கிறேன்.  மிகச் சுவையான ஆழமான எழுத்துகள்.  டொராண்டோவில் அவர் வந்து கம்பனைப் பற்றிப் பேசினபோது கேட்டிருக்கிறேன்.

தினமணியில் 2011-இல் வந்த ஒரு கட்டுரை இதோ:

====

முகமதிய மதத்தைச் சேர்ந்த பலர் தமிழ் அன்பர்களாய் வாழ்ந்து, தமிழைத் தங்கள் புலமைத் திறத்தால் வளப்படுத்தியிருக்கிறார்கள். அந்த அன்பர்களின் வரிசையில், அண்மைக்கால உதாரணம் 84 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவரும், வாழ்நாள் முழுவதும் கம்பராமாயணத்தில் தோய்ந்து வாழ்ந்தவருமான பெரும்புலமை படைத்த அறிஞர் நீதிபதி மு.மு.இஸ்மாயில். 1921-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி பிறந்தார்.
அவர் தம்மைத் தாமே உருவாக்கிக்கொண்ட பெருமைக்குரியவர். ஒன்பது வயதில் தாயையும், பதிமூன்று வயதில் தந்தையையும் இழந்த அவரை வளர்த்தவர்கள் உறவினர்கள்தான். (""நான் கடவுளால் வளர்க்கப்பட்ட பிள்ளை தெரியுமோ?'' என்று சொல்லி இஸ்மாயில் நகைப்பதுண்டு) நிறைந்த கடவுள் பக்தியுடன் வாழ்ந்த பெருமகன். "அல்லாவுக்கு ஆயிரம் நாமங்கள்' என்ற குறிப்பிடத்தக்க நூலை எழுதியவரும்கூட.
அவரது இளமைக்காலமும் பள்ளி வாழ்வும் நாகூரில்தான் கழிந்தது. இளம் வயதிலேயே மிகுந்த புத்திசாலியாக இருந்தார். அதனால் பள்ளி அவரை மூன்றாம் வகுப்பிலிருந்து நேரடியாக ஐந்தாம் வகுப்புக்கு (இரட்டைத் தேர்ச்சி) அனுப்பியது.பாடகர் ஏ.வி.ரமணனின் தந்தையான ஆராவமுது ஐயங்கார் என்ற பெரும் தமிழறிஞரிடம் எஸ்.எஸ்.எல்.சி.யில் பாடம் கேட்ட பெருமையும் இஸ்மாயிலுக்கு உண்டு. மிகப்பெரும் புலவரிடம், தமிழறிவுக்கான அஸ்திவாரம் பலமாகப் போடப்பட்டதால், அவருக்கு அது இறுதிவரை கைகொடுத்தது. சட்டப் படிப்புப் படித்த அவர், பழந்தமிழ் இலக்கியங்களைத் தம் சொந்த ஆர்வத்தால் நிறையப் படித்துத் தேர்ந்தார்.

பேராசிரியர் கே.சுவாமிநாதன் என்ற புகழ்பெற்ற காந்தியவாதியைத் தெரியாதவர்கள் இருக்க இயலாது. தனிமனித ஒழுக்கத்தின் சிகரமாக தொண்ணூறு வயதுக்குமேல் நிறைவாழ்வு வாழ்ந்தவர். மகாத்மா காந்தி நூல்களைத் தொகுத்தவர். கல்லூரி நாள்களில் இஸ்மாயில் தனது அறிவுக் கூர்மை காரணமாக பேராசிரியர் சுவாமிநாதனின் பெறாத பிள்ளைபோல் ஆகிவிட்டார்.

காந்தியச் சிந்தனைகள் பலவற்றை அவர் உள்வாங்கிக்கொண்டது பேராசிரியரிடமிருந்துதான். இஸ்மாயிலின் உறவினர்கள் எல்லாம் அசைவம்தான். ஆனால், பேராசிரியரின் காந்தியத் தாக்கம் இஸ்மாயிலை முழு சைவமாக மாற்றிவிட்டது. (இளம் வயதிலிருந்தே காந்தியின் "ஹரிஜன்' இதழ்களை வால்யூம் வால்யூமாக பைண்ட் செய்து வைத்துக்கொண்டு தம் வாழ்நாளின் இறுதிவரை பாதுகாத்து வந்தார் இஸ்மாயில்.)

உணவில் சைவத்தைப் பின்பற்றிய அவருக்கு, மிகவும் பிடித்தது வைணவக் காப்பியமான கம்பராமாயணம். கம்பர் அவரது முழுமனதையும் கொள்ளை கொண்டுவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.


இஸ்மாயிலின் கம்பராமாயணச் சொற்பொழிவைக் கேட்ட தமிழ் அன்பர்கள், ஆய்வுச்சுவை தோய்ந்த அந்த இனிய தமிழில் சொக்கிக் கிறங்கினார்கள். இஸ்மாயில், பல இடங்களில் மீண்டும் மீண்டும் கம்பன் குறித்துப்பேச அழைக்கப்பட்டார். பலர் அவர் பேசிய அதே கம்பன் கருத்தை அதே சொற்களில் மறுபடி மறுபடி அவரிடமிருந்தே "நேயர் விருப்பம்'போல் கேட்க ஆசைப்பட்டார்கள்.

சொற்பொழிவாளராக இருந்த இஸ்மாயில், புகழ்பெற்ற பல பத்திரிகைகளின் தீபாவளி மலர் உள்ளிட்ட சிறப்பிதழ்களில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அவர் எழுதிய முதல் புத்தகம், "மௌலானா அபுல்கலாம் ஆசாத்' பற்றியது. அதற்கு முன்னுரை தந்து பெருமைப்படுத்தியவர் மூதறிஞர் ராஜாஜி.


கம்பன் கண்ட ராமன், கம்பன் கண்ட சமரசம், செவிநுகர் கனிகள், வள்ளலின் வள்ளல், மும்மடங்கு பொலிந்தன, பழைய மன்றாடி - என அடுத்தடுத்து இவரது பழந்தமிழ் ஆய்வு நூல்கள் நிறைய வெளிவரலாயின.
வாலிவதை பற்றிய இவரது "மூன்று வினாக்கள்' என்ற நூல், உலகப் புகழ்பெற்ற ஓர் ஆன்மிகப் பெரியவரைப் பெரிதும் கவர்ந்தது. அந்த நூலுக்காகவே இவருக்குப் பொன்னாடை அணியச் செய்து, பாராட்டி மகிழ்ந்த அந்தத் துறவி நூறாண்டு வாழ்ந்த காஞ்சி மகாபெரியவர் பரமாச்சாரியார்.

இஸ்மாயிலுக்கும் பரமாச்சாரியார் மேல் மிகுந்த மரியாதை உண்டு. "ஒருவர் எந்த மதத்தில் பிறந்தாரோ, அந்த மதத்தின் ஆன்மிக நெறிகளை அனுசரித்து வாழவேண்டும்' என்ற பரமாச்சாரியாரின் கருத்தை இஸ்மாயில் பெரிதும் போற்றியவர்.

இயல் செல்வம், சேவா ரத்தினம், இராம ரத்தினம் முதலிய பல பட்டங்கள் இவரது இயல்புக்குப் பொருத்தமாக வழங்கப்பட்டன. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாருக்கு இவர்மேல் அன்பும் மதிப்பும் உண்டு. இவருக்குக் கடிதங்கள் எழுதும்போது, "உலகம் போற்றும் உத்தம' என்று தொடங்கித்தான் கடிதம் எழுதுவாராம் அண்ணங்கராச்சாரியார்.
கம்பன் கழக நிறுவனர்களுள் ஒருவர் இஸ்மாயில். "தினமணி' முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமன், கம்பன் அடிப்பொடி சா.கணேசன், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், சி.எம்.அழகர்சாமி, பழ.பழனியப்பன் ஆகியோர் மற்ற நிறுவனர்கள். இப்போது கம்பன் கழகத்தின் தலைவராக இயங்குபவர் ஆர்.எம். வீரப்பன்.

கம்பராமாயண மூல நூலை, மெல்லிய உறுதியான தாளில் முழுமையான கையடக்க ஆராய்ச்சிப் பதிப்பாகப் பதிப்பித்த பெருமை இஸ்மாயிலுக்கு உண்டு. தெ.பொ.மீனாட்சிசுந்தரம், அ.ச.ஞானசம்பந்தன், தெ.ஞானசுந்தரம் முதலிய தமிழ் அறிஞர்கள் அந்தப் பதிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்தார்கள். இஸ்மாயிலின் மிகப்பெரிய சாதனை என்று இந்தப் பதிப்புப் பணியைச் சொல்லலாம்.

1976-இல் நடைபெற்ற கம்பன் விழாவில் அதன் முதல் பதிப்பு வெளியாயிற்று. ஆயிரத்துக்கும் மேலான கம்பன் அன்பர்கள் அந்தப் பதிப்பை விலைகொடுத்து வாங்க வரிசையில் நெடுநேரம் நின்றார்கள். வாங்குவதில் பெரும் போட்டி இருந்ததால், காவல்துறையினர் தலையிட்டு வரிசையை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது.

மூதறிஞர் ராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி, பெருந்தலைவர் காமராஜ் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் இஸ்மாயில். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியாக விளங்கிய பெருமைக்குரியவர் இஸ்மாயில். 1980-இல், முந்தைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரிக்குப் பிறகு, தமிழகத்தின் தாற்காலிக ஆளுநராகவும் சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார்.

தமிழின் பக்தி இலக்கியம், மதங்கடந்து தமிழர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் ஆற்றல் பெற்றது என்பதற்கு இஸ்மாயிலின் கம்பராமாயணப் புலமை ஓர் எடுத்துக்காட்டு.

÷2005-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி இஸ்மாயில் காலமானார். அவர் நினைவைப் போற்றும் வகையில், பழ.பழனியப்பன் எழுதிய "இலக்கியமான நீதிபதி' என்ற தலைப்பில் 19.1.2005 அன்று "தினமணி' நாளிதழில் கட்டுரை வெளியானது குறிப்பிடத்தக்கது.

[ நன்றி: தினமணி, 2011 ]

தொடர்புள்ள பதிவுகள்:

மு. மு. இஸ்மாயில் : விக்கிப்பீடியா